தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு
சூலுார்; தோட்டக்கலைத்துறை சார்பில், மாநில அளவிலான பயிலரங்கு கண்ணம்பாளையத்தில் நடந்தது.சூலுார் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில்,பாரதிய பிரகருதிக் கிரிஸி பதாதி திட்டத்தின் கீழ், மாநில அளவிலான ஒரு நாள் பயிலரங்கு கண்ணம்பாளையம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடந்தது. சூலுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சித்ரா பானு வரவேற்றார்.கோவை, ஈரோடு, நீலகிரி,நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட இயற்கை விவசாயிகள், ஆர்வலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். பங்கேற்ற விவசாயிகள், இயற்கை விவசாயத்தில் தங்களின் அனுபவங்கள், சவால்களை பகிர்ந்து கொண்டனர். அன்னூர் வட்டார உதவி இயக்குனர் கோமதி பாரதிய பிரகிருதிக் கிரிஸி பதாதி திட்டம் குறித்து விளக்கினார். அங்கக சான்றிதழ் பெறுவது, குறித்து விளக்கப்பட்டது.இயற்கை வேளாண் தொழில்நுட்பம் குறித்து காரமடை வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சகாதேவன் பேசுகையில், இயற்கை விவசாயம் காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்ததுதான். படிப்படியாக அடுத்த தலைமுறையினர் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது, இயற்கை விவசாயத்தை அனைவரும் செய்ய துவங்கியுள்ளது வரவேற்புக்கு உரியது. அதற்கான தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டால், அனைவரும் சாதிக்கலாம், என்றார். இயற்கை விவசாயி தங்கவேல், மயில்சாமி, செந்தில் குமரன் உள்ளிட்டேர் இயற்கை விவசாயம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தோட்டக்கலை அலுவலர் கிருத்திகா நன்றி கூறினார்.