வன எல்லையில் உருக்கு கம்பி வேலி; கோவையில் இன்று நீதிபதிகள் ஆய்வு
தொண்டாமுத்துார்; வன எல்லையில் உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடங்களில், ஐகோர்ட் நீதிபதிகள் இன்று ஆய்வு செய்கின்றனர். கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து, காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில், வன எல்லையில் உருக்கு கம்பி வேலி அமைப்பதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, வேலி அமையும் இடங்களை ஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று விமானத்தில் கோவை வந்தனர். காரில் மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். இன்று (செப். 5) காலை 10 மணிக்கு, மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் உருக்கு வேலி அமைக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். மதிய உணவுக்கு பின், மாலை 3.30 மணிக்கு மேல் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட குப்பேபாளையம், ஆதிநாராயணன் கோவில் பகுதியில் வேலி அமைக்கும் இடத்தை ஆய்வு செய்கின்றனர். அதன்பின், கோவையில் உள்ள ஐகோர்ட் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகின்றனர். மறுநாள் 6ம் தேதி, அரசு துறை அதிகாரிகளுடன் விவாதிக்கின்றனர். பகல் 2.10 மணிக்கு, விமானத்தில் சென்னை செல்ல இருக்கின்றனர். ஆய்வின்போது, கனிம வளக்கொள்ளை நடந்த இடங்களையும் பார்வையிட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.