உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாசன தண்ணீர் திருட்டை தடுக்காதது ஏன்? பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கேள்வி

பாசன தண்ணீர் திருட்டை தடுக்காதது ஏன்? பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கேள்வி

பொள்ளாச்சி: 'வறட்சியான நேரத்திலும் பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீர், கடைமடை வரை கொண்டு செல்ல, தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, நீர்வளத்துறை அதிகாரிகளிடம், பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தினர். பொள்ளாச்சி அருகே, 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்களும்; புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆழியாறு ஆறு வாயிலாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வேட்டைக்காரன்புதுார் கால்வாய் வழியாகவும் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டிற்கு ஏழே கால் டிஎம்சி தண்ணீர் ஆழியாரிலிருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரளாவுக்கு வழங்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, கடந்த மே மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. எதிர்பார்த்தபடி தென்மேற்கு பருவமழை பெய்யாததால், அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்நிலையில், ஆனைமலையில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜாகண்ணன் முன்னிலை வகித்தார். அதில், பாசன சபை தலைவர்கள், அணைகளின் நீர் இருப்பு; நீர் வரத்து எதிர்பார்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நீர் மேலாண்மை பின்பற்றி சிக்கனமாக எவ்வாறு பயன்படுத்துவது; இன்னும் ஒரு மாதம் தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்தல், கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகள் கவலை பாசன சபை தலைவர் வித்யாசாகர் கூறுகையில், ''அணை நீர்மட்டம் சரிந்ததால், மீதம் உள்ள நாட்களுக்கு உரிய தண்ணீர் பெற்று அறுவடை செய்ய முடியுமா என விவசாயிகள் கவலையடைந்தனர். இதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கடுமையான காலக்கட்டத்திலும், தடையில்லாமல் தண்ணீர் வழங்கும் நீர்வளத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை வரவேற்றோம். அதே நேரத்தில் இனி எஞ்சியுள்ள கால கட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் கொண்டு சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தடையாக உள்ள தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், துறை சார்பில் தண்ணீர் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்