பிடித்தம் செய்த பி.எப்., நிதிக்காக போராட்டம்; அப்டேட் ஆனதும் கிடைக்குமென ஆறுதல்
பொள்ளாச்சி; தனியார் நுாற்பாலையில், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகையை பெற்றுத்தரக்கோரி, பொள்ளாச்சியில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முற்றுகையிட்டனர்.உடுமலை, கணபதிபாளையம் பகுதியில், பார்த்தசாரதி ஸ்பின்னிங் மில்ஸ் இயங்கி வந்தது. அங்கு பணியாற்றிய தொழிலாளர்களிடம், வருங்கால வைப்பு (பி.எப்.,) நிதிக்காக, பணம் பிடிக்கப்பட்டது.நுாற்பாலை மூடப்பட்டதால், பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., நிலுவை தொகையை பெற்றுத்தர வேண்டுமென, பொள்ளாச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூறியதாவது:கடந்த, 1982ம் ஆண்டு முதல், பார்த்தசாரதி ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்தோம். மொத்தம், 125 தொழிலாளர்களிடம், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டது. இருப்பினும், நிதி பங்களிப்பை உரிய காலத்தில் செலுத்தாமல், 2015ல் நுாற்பாலை மூடப்பட்டது.ஓய்வு பெற்ற பிறகும், பணிக்கொடை மற்றும் உரிய ஓய்வூதியம் பெற முடியாமல் துன்பப்படுகிறோம். இது தொடர்பாக, திருப்பூர் வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் அலுவலகத்திலும் மனு அளித்தோம்.இதையடுத்து, கோவை வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அலுவலகத்திற்கு செல்லுமாறு தெரிவித்தனர். அங்கு சென்றால், பொள்ளாச்சி அலுவலகத்திற்கு செல்லுங்கள் என, ஒவ்வொரு முறையும் அலைகழிக்கப்படுகிறோம்.பல ஆண்டுகளாக, மனு கொடுத்து முறையிட்டும் பி.எப்., தொகை விடுவிக்கப்படுவதில்லை. துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து, பிடித்தம் செய்த தொகை மற்றும் பி.எப்., சலுகைகளை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, கூறினர்.இது குறித்து, பொள்ளாச்சி அமலாக்க அதிகாரி கார்த்திகேயனிடம் கேட்டபோது, ''தொழிலாளர்களின் யு.ஏ.என்., பெறப்பட்டு, கோவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு, யு.ஏ.என்., 'அப்டேட்' செய்தால், பி.எப்., தொகை கிடைக்கப் பெறும்,'' என்றார்.