தேசிய கூடைப்பந்து போட்டியில் விளையாடிய மாணவிக்கு தங்கம்
மேட்டுப்பாளையம்; தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில், தமிழ்நாடு அணியில் விளையாடிய காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி மாணவி தக் ஷதா, தங்கப்பதக்கம் பெற்றார். தேசிய அளவிலான, 50வது கூடைப்பந்து போட்டிகள், உத்திரா கண்ட் மாநிலம் டேராடூனில் அக்டோபர் 2ம் தேதியில் இருந்து, 10ம் தேதி வரை நடந்தது. இதில், 13 வயதிற்கு உட்பட்ட பிரிவில், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி தக் ஷதா, தமிழ்நாடு மாணவிகள் அணியில் பங்கேற்று விளையாடினார். சிறப்பாக விளையாடிய இந்த மாணவி, மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பரிசையும், தங்கப் பதக்கத்தையும் வென்றார். தேசிய அளவில் தமிழ்நாடு அணிக்காக, விளையாடிய இந்த மாணவியை பள்ளியின் தாளாளர் பழனிசாமி, முதல்வர் சசிகலா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். பயிற்சியாளர்கள் மாரியப்பன், காயத்ரி ஆகிய ஆசிரியர்களை பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் பாராட்டினர்.