கல்லுாரிக்கு சொந்த வாகனங்களில் வரும் மாணவர்கள்; ஆவணங்களை சோதிக்க கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல்
கோவை: கல்லுாரிகளுக்கு கார், பைக்குகளில் வரும் மாணவர்களை சோதனையிடவும், கண்காணிக்கவும் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லுாரிகள் என, 129 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரிகளுக்கு சில மாணவர்கள் பைக்குகள், கார்களில் வருகின்றனர். இவர்களில் பலர் முறையான ஆவணங்களை வைத்துள்ளனர். சிலரிடம் ஆவணங்கள் முறையாக இருப்பதில்லை. இவர்கள் விபத்தில் சிக்கும் போது மருத்துவ சிகிச்சை கட்டணம் உள்ளிட்டவற்றை பெருவதில் சிக்கல் ஏற்படுகிறது. கல்லுாரி நிர்வாகத்தினருக்கும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக உள்ளது. பைக், கார்களில் வரும் மாணவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா என சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் கலைச்செல்வி கூறுகையில்,''மாணவர்களில் சிலர் வாகன பதிவு சான்றிதழ், காப்பீடு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை வைத்திருப்பதில்லை. ''கல்லுாரிக்கு வாகனங்களில் வரும் மாணவர்களிடம் ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் இல்லை எனில், அந்த வாகனங்களை கல்லுாரி வளாகத்துக்குள் அனுமதிக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோருக்கும் தெரிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.