விளை நிலங்களை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு
விளை நிலங்களை ஒட்டிய பகுதிகளில் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.பருவமழை காரணமாக குளங்கள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. நேற்று,தெற்கு மண்டலம், நொய்யல் ஆற்றில் இருந்து குறிச்சி குளத்துக்கு தண்ணீர் செல்லும், குறிச்சி அணைக்கட்டு பகுதியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.பேரூர் ரோடு, ஆண்டிபாளையம் பிரிவு அருகே, நொய்யல் ஆற்றில் இருந்து உக்கடம் குளத்துக்கு செல்லும் ராஜவாய்க்காலில் மதகுகள் வழியே உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், சங்கனுார் பள்ளம், ராஜவாய்க்கால் மற்றும் சிங்காநல்லுார் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் சந்திக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார்.இப்பகுதிகளையொட்டி விளை நிலங்கள் அதிகம் உள்ளன. மழை காலங்களில் அழுத்தம் காரணமாக, கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, இங்குள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுவது தொடர் கதையாக உள்ளது. இப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட,மாநகராட்சி பணியாளர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.