இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் பூக்கள், பழங்கள் விலை உயர்வு
கோவை : தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை கனி முன்னிட்டு, கோவையில் நேற்று பழங்கள், பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கனி காணுதல் நிகழ்வு கடைபிடிக்கப்படும். முந்தைய நாள் இரவில், கண்ணாடி வைத்து அதன் முன் பூக்கள், பழங்கள், நாணயங்கள், தங்கம் எடுத்துவைத்து, அதிகாலையில் அதனை முதலில் பார்ப்பது வழக்கம். இதனால், ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. கோவை சந்தைக்கு பழங்கள் மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும், 100 டன் வரை வரத்து இருக்கும்.அதே போன்று, பூக்கள் சத்தியமங்கலம், காரமடை, புளியம்பட்டி, சேலம், போன்ற பகுதிகளில் இருந்து தினந்தோறும், 10 டன் பூக்கள் வரத்து இருக்கும். அதன் படி, பழங்கள், பூக்கள் விற்பனை கடந்த இரண்டு நாட்கள் சூடுபிடித்துள்ளது. கோவை சந்தையில், நேற்று ஆப்பிள் தரத்தை பொறுத்து, 250 முதல் 280 ரூபாய் வரையும், ஆரஞ்ச் 150 ரூபாய்க்கும், சாத்துக்குடி 100 ரூபாய்க்கும், மாம்பழம் 180 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும், திராட்சை 160 -180 ரூபாய்க்கும், வெள்ளரி 60-80 ரூபாய்க்கும், மாதுளை 250 ரூபாய்க்கும், பைானப்பிள் 80 ரூபாய்க்கும், எலுமிச்சை 60-70 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை நிலவரம்
மல்லிகை கிலோ 900-1000 ரூபாய்க்கும், முல்லை 1200 ரூபாய்க்கும், ரோஸ் கட்டு 200-240 ரூபாய்க்கும், அரளி 400 ரூபாய்க்கும், செவந்தி 200-240 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக, கோவை மலர் வியாபரிகள் சங்க பொருளாளர் துரை தெரிவித்தார்.