உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுவுக்கு கூடுதலாக ரூ.30 வசூலித்து தைரியம்! கூடவே ரசீதும் தருகிறது டாஸ்மாக்

மதுவுக்கு கூடுதலாக ரூ.30 வசூலித்து தைரியம்! கூடவே ரசீதும் தருகிறது டாஸ்மாக்

கோவை:கோவையில், டாஸ்மாக் எலைட் கடையில், ஒரு பாட்டிலுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதுடன், அந்த கூடுதல் தொகைக்கு வெகு துணிச்சலாக ரசீதும் கொடுக்கின்றனர். மக்களிடம் பகல் கொள்ளையடிப்பதை, அரசே அனுமதிப்பதாகத்தானே இதற்குப் பொருள் என்று, பணத்தை இழந்த 'குடி'மகன்கள் குமுறுகின்றனர். 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலாகும் தொகை, 'முக்கியஸ்தர்'களுக்குப் போவதால்தான், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 2024ல், கூடுதலாக ரூ.10 வசூலித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தது. இதெல்லாம் ஒரு அபராதமா என்ற ரீதியில், தொகையை செலுத்திவிட்டு, தமிழகம் முழுக்க இன்னும் கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். இந்த கூடுதல் தொகை என்பது, முறைகேடாக வசூலிக்கப்படும் ஒன்று என்பதால், இதற்கு 'பில்' தர மாட்டார்கள். ஆனால், கோவையில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல, எலைட் கடையில் இந்த கூடுதல் தொகைக்கும் ரசீது கொடுத்துள்ளனர். கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள எலைட் கடையில் (எண்: 1668), ரூ.3090 மதிப்புள்ள மது பாட்டிலுக்கு, ரூ.3,120 வசூலித்துள்ளனர். அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.30 தர மறுத்த வாடிக்கையாளர், அதற்கு ரசீது கேட்டுள்ளார். கடை ஊழியர்கள், இதென்ன பிரமாதம் என்பது போல, கடை எண், முகவரியைக் குறிப்பிட்டு ரூ.3,120 க்கு ரசீது (எண்: 090801) கொடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், அந்தக் கூடுதல் தொகையை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, வாடிக்கையாளர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறை உள்ளது. இதற்காக ரூ.10 கூடுதலாக பெற்று, அதற்கான க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டுவர். இந்த பாட்டிலில் அந்த ஸ்டிக்கரும் ஒட்டவில்லை. துணிச்சலாக ரூ.30 கூடுதலாக வாங்கி, ரசீதும் கொடுத்துள்ளனர். அப்படியானால், யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம்தானே காரணம். மக்களிடம் பகல் கொள்ளையடிப்பதை, அரசே அனுமதிப்பதாகத்தானே இதற்குப் பொருள். ஆட்சியாளர்களுக்கும் இதில் பங்கு போவதைத்தான், ரசீது கொடுத்து கூடுதலாக வசூலிப்பது வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, “இது குறித்து விசாரிக்கிறேன். விசாரணைக்குப் பிறகு, விளக்கம் கொடுக்கிறேன்,” என தெரிவித்தார். இந்த செய்தி அச்சுக்கு செல்லும்வரை, அவர் அழைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி