காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; கோவையில் போலீஸ் பாதுகாப்பு
கோவை; ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பணியகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, கோவை மாவட்டம் முழுவதும், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த பயணியர் மீது, ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 28 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் உள்ள முக்கிய சோதனை சாவடிகள், கோவில்கள், மசூதிகள், கட்சி அலுவலங்கள், ரயில்வே ஸ்டேஷன், லாட்ஜ், பஸ் ஸ்டாண்ட், மால் உள்ளிட்ட இடங்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். முக்கிய இடங்களில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் மாநகர பகுதிகளில் 881 பேலீசார், கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உட்பட அனைத்து அதிகாரிகளும் இரவு நேர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
ரயில்வே ஸ்டேஷன்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர். பிளாட்பாரங்களில் சோதனையை தீவிரப்படுத்திய அவர்கள், ரயில்களில் இருந்து இறங்கிய பயணிகளை கண்காணித்தனர். தொடர்ந்து பார்சல் பிரிவுகளிலும் சோதனை நடத்தினர்.