உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பயணம்; 32,400 மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு

பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பயணம்; 32,400 மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2025 - 26ம் ஆண்டு பயிலும், 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி திறந்ததும் பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படவுள்ளன.இதற்காக, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாடப்புத்தங்கள் இருப்பு வைக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் வகையில், நேற்று முதல், இருப்பு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.கல்வி மாவட்ட அலுவலர் பரமசிவம் மேற்பார்வையில், பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, விலையில்லா நலத்திட்டங்களான பாட புத்தகங்கள், பாடகுறிப்பேடுகள், புத்தகப்பை, காலணி, ஸ்நாக்ஸ், சீருடைகள், கணித உபகரண பெட்டிகள், புவியியல் வரைபட நுால்கள், மலைப்பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு மழைக்கோட்டுகள், ஸ்வெட்டர் வழங்கப்படுகின்றன.மொத்தம், 32,400 மாணவர்களுக்கு பள்ளி துவங்கும் முதல்நாளிலேயே இவற்றை வழங்கும் வகையில், நலத்திட்ட பொருட்கள், புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !