ஆயுதபூஜை கொண்டாட்டம் களைகட்டியது! பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
பொள்ளாச்சி: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நேற்று கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்களால், விற்பனை களைகட்டியது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வீடுகளை சுத்தம் செய்தல், வாகனங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். மேலும், ஆயுதபூஜையை முன்னிட்டு, பொள்ளாச்சி பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. இது ஒருபுறமிருக்க, சிலர், ரோட்டோரமாக தற்காலிக கடைகளை அமைத்து, பூஜை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர். நேற்று, காலை முதலே மார்க்கெட்டிற்கு, மக்கள் கூட் டம் அதிகரித்தது. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால், பாதசாரிகள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் தடுமாறினர். பூ மார்க்கெட் முன் தீராத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கையாக 'பேரிகார்டு'களை அமைத்து, பூ மார்க்கெட் முன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். காலை முதலே கார் மற்றும் கனரக வாகனங்கள் கடைவீதி வழியே செல்ல தடை விதிக்கப்பட்டது. அவ்வகையில், கடைகளுக்கு ஏற்றாற்போல், செவ்வந்தி கிலோ - 300 ரூபாய்; மல்லிகை - 1,700, ஜாதிமல்லிப்பூ - 800, அரளிப்பூ - 420, செண்டுமல்லி - 60, முல்லை - 800 ரூபாய் மற்றும் சம்பங்கி - 300 ரூபாய்க்கு விற் பனையானது. பொரி படி - 20 ரூபாய், கடலை - 120, பொட்டுக் கடலை - 100 ரூபாய் மற்றும் மிட்டாய் வகைகள் விற்பனை களைகட்டியிருந்தது. ஆப்பிள் கிலோ - 150, ஆரஞ்சு -- 55, கொய்யா -- 80, மாதுளை - 180, அன்னாசி -- 50, திராட்சை -- 100, எலுமிச்சை -- 140 ரூபாய்க்கு விற்பனையானது. அனைத்து பொருட்கள் விலையும் வழக்கத்தை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. வாழைக்கன்று ஜோடி 40 முதல் 50 ரூபாய்; பூசணிக்காய் கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. அலங்கார தோரணங்கள், 10 முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது. பூஜை பொருட்களை வாங்க, அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடைகளில், பூஜை பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்தது.