உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவர்கள் இன்றி இதய சிகிச்சை துறை துடிக்கிறது!; அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

மருத்துவர்கள் இன்றி இதய சிகிச்சை துறை துடிக்கிறது!; அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

கோவை : கோவை அரசு மருத்துவ மனை இதய அறுவை சிகிச்சை பிரிவில், போதுமான டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு, 7,000 முதல் 9,000 வரை உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு அரசு காப்பீடு வாயிலாகவும், காப்பீடு இன்றியும், பல்வேறு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இதய அறுவை சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக முக்கிய அறுவைசிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வசதியில் பின்தங்கிய பலர், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு மருத்துவமனையில், நான்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் முன்பு இருந்தனர். தற்போது, இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். முக்கிய அறுவைசிகிச்சைகளின் போது, நான்கு டாக்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தற்போது, பற்றாக்குறையால் பெரிய அளவிலான அறுவைசிகிச்சைகள் சென்னைக்கும், மதுரைக்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ''இதய அறுவை சிகிச்சை துறையில் நான்கு பணியிடங்கள் உள்ளன. இதில், இரண்டு இடங்கள் காலியாகவுள்ளன. பொதுவாகவே, இதய அறுவை சிகிச்சை பிரிவில், தமிழக அளவில் ஆட்கள் குறைவாகத்தான் உள்ளனர். அவ்வாறு, படித்து வருபவர்களும் சென்னையைதான் கவுன்சிலிங் வாயிலாக, தேர்வு செய்கின்றனர். இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

செல்ல கையில் பணமில்லை'

பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் கூறுகையில், ' என் கணவருக்கு, இதயத்தில் அடைப்பு மற்றும் ஒரு வால்வு இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளார். கோவை அரசு மருத்துவமனையில், முதலில் ஒரு வாரம், பின்னர் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்றோம்.அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் இல்லை என எங்களை, சென்னை அல்லது தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூறியதால் திரும்பி வந்துவிட்டோம். சென்னைக்கு சென்றபோது, தாமதம் ஆகும் என்பது தெரிந்தது. தனியார் மருத்துவமனையில், 6 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறியுள்ளனர். கூலி வேலை செய்யும் நாங்கள், பணத்திற்கு எங்கு செல்வது என, திணறி வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை