சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில், மூன்று நாள் தேரோட்டம் நிறைவடைந்த நிலையில், நேற்று மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது.பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, 18 கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 12ம் தேதி ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா மற்றும் கிராமசாந்தி, வாஸ்து சாந்தி, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மே, 27ம் தேதி வரை, அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி மக்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அவ்வகையில், மே 29ல், முதல் நாள் தேரோட்டம் துவங்கி கிழக்குப்பகுதியிலும், மே, 30ல் இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, மேற்குப்பகுதியிலும் நிறுத்தப்பட்டது. நேற்றுமுன்தினம், மூன்றாம் நாள் தேரோட்டம் துவங்கி, கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். இறுதி நிகழ்ச்சியாக, தேர்க்கால் பார்த்தல், கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடல் நடந்தது. நேற்று, மதியம், மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவடைந்தது.