நாறுது ஊரு... காரணம் யாரு?
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை அறிவித்துள்ளது. திடக்கழிவுகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு என, தரம் பிரித்து சேகரிக்கவும்; மக்கும் கழிவில் உரம் தயாரிக்கவும், மக்காத கழிவை மறுசுழற்சிக்கு தொழிற்சாலைகளுக்கு வழங்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மைக்காக நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.* பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள்; தெற்கு, 26; ஆனைமலை, 19; கிணத்துக்கடவு, 34 என மொத்தம், 118 ஊராட்சிகள் உள்ளன.வால்பாறை, பொள்ளாச்சி என இரண்டு நகராட்சிகள் உள்ளன. சூளேஸ்வரன்பட்டி, சமத்துார், ஜமீன் ஊத்துக்குளி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், கோட்டூர், நெகமம், கிணத்துக்கடவு என, ஒன்பது பேரூராட்சிகள் உள்ளன.நகரம் மற்றும் கிராம ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, குப்பையை தரம் பிரித்து கையாளும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, மக்கள்தொகைக்கு ஏற்ப, துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச்சென்று குப்பையை சேகரித்து, மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சியின் மக்கள் தொகை, 1.26 லட்சமாகும். 26,669 குடியிருப்பு பகுதிகளில் இருந்து, தினமும், 31 டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. இப்பணியில், 116 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.ஆனாலும், குப்பை சேகரித்து, ஆங்காங்கே மூட்டை மூட்டையாக கட்டி, நாள் கணக்கில் வைத்திருக்கின்றனர். பொது இடங்களில் குப்பை குவிந்திருந்தால் அகற்றுவதில்லை. இதனால், சுகாதாரம் பாதித்து, துர்நாற்றம் வீசுகிறது. திட்டம் என்னாச்சு!
குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை பெரும்பாலான ஊராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்துவதில்லை. சேகரமாகும் குப்பை, பொது இடங்கள், குளம், குட்டைகள், ரோட்டோரம், மயான பகுதிகளில் குவிக்கப்படுகிறது.இதனால், துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. அளவு கடந்த துர்நாற்றம் ஏற்படும் போது, துாய்மை பணியாளர்களே குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், காற்று மாசுபட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சில ஊராட்சிகளில் திடக்கழிவு கூடாரம் காட்சி பொருளாக பயனற்று கிடக்கிறது. வால்பாறை
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெளியாகும் குப்பை, ஸ்டேன்மோர் ரோட்டில் திறந்தவெளி குப்பைக்கிடங்கில் குவிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் பணியும் நடக்கிறது.ஆனால், திட்டத்தை முழுமையாக செய்ய முடியாததால், குப்பை குவித்து கிடக்கிறது. இதனால், சுகாதாரம் பாதித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தினமும், 9 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பை கிடங்கில் தரம் பிரித்து, உரம் தயாரிக்கப்படுகிறது.குப்பைக்கிடங்கு சிறிய அளவில் உள்ளதால், உடனடியாக தரம்பிரிக்க முடியாத நிலை உள்ளது. விரைவில் குப்பை கிடங்கு விரிவுபடுத்தப்பட்டு, நவீன முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்,' என்றனர்.
இரு ஆண்டுகளில் 200 டன் உரம்!
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சியில், நான்கு உரமாக்கல் மையங்கள் அைமக்கப்பட்டுள்ளன. மக்கும் கழிவுகளை இயந்திரங்கள் வாயிலாக அரைத்து உரமாக்கப்படுகிறது. கடந்த, இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இலவசமாக, 200 டன் உரம் வழங்கப்பட்டுள்ளது.அழகாபுரி வீதியில், உயிரி எரிவாயு (பயோ காஸ்) தயாரிக்க ஆடுவதை கூடம் அருகே பிளான்ட் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் இரண்டு டன் பழம் மற்றும் உணவுக்கழிவுகளை அரைத்து, மீத்தேன் உற்பத்தி செய்து, உயிரி எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து சிமென்ட் தொழிற்சாலைக்கு எரிபொருள் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஜன., மாதம் முதல் இதுவரை, 670 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு அனுப்பப்பட்டுள்ளது.பேம்பர்ஸ், நாப்கின், ரெக்ஸின் போன்ற கழிவுகள், எரியூட்டி வாயிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எரிக்கப்படுகிறது.இவ்வாறு, கூறினர். - நிருபர் குழு -