ஒரு வாழை மரத்துக்கு இழப்பீடு ரூ.7 தானாம்!
மேட்டுப்பாளையம்; சூறாவளி காற்றால் சேதமடைந்த ஒரு வாழைக்கு, ரூ.7 கொடுத்தால் வாங்க மாட்டோம். 200 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வாங்குவோம் என, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. பல லட்சம் வாழை மரங்கள் தார் விட்ட நிலையில் இருந்தன. இன்னும் ஒரு சில மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன.இந்நிலையில் இரண்டு மாதம் முன்பு, ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை சூறாவளி காற்று வீசியது. இதில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. அரசு தோட்டக்கலை துறை சார்பில் ஆய்வு செய்ததில், 3 லட்சத்து 75 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தது என கணக்கிட்டுள்ளனர். இந்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சூறாவளி காற்றால் விழுந்த ஒரு வாழை மரத்திற்கு, ஏழு ரூபாய் வழங்க அரசு அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் தரப்பில் ஒரு மரத்திற்கு 200 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கோவை மாவட்ட அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில், ஒரு வாழைக்கு, 200 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வாங்குவோம். 7 ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், ஒரு வாழைக்கு, 100 ரூபாய் கொடுக்கலாம் என மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இத்தகவலை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.