இ-பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும்! வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி
வால்பாறை: வால்பாறைக்கு, இ-பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும், என, விக்கிரமராஜா கூறினார். வால்பாறையில் தி.மு.க., பிரமுகர் ஜே.பி.ஆர்., இல்லத்திருமண விழாவிற்கு வந்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, நிருபர்களிடம் கூறியதாவது: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். மனித - வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வால்பாறை நகரில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, கார் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். வால்பாறையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல மசோதாவை துவக்கத்திலேயே நிறுத்த தமிழக அரசு ஆலோசனை செய்ய வேண்டும். வனத்துறை சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணியர் அனுமதிக்கான கெடுபிடிகள் இல்லாமல், ஒற்றை சாளர முறையில் கட்டணம் வசூலிக்க வேண்டும். வால்பாறை புதுமார்க்கெட்டை இடித்து புதுப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அப்படி செய்தால் அங்குள்ள அனைத்து கடைகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். புதிதாக மார்க்கெட் கட்டிய பின், ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறைக்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள, இ-பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும். சுற்றுலா தலங்களில், வனத்துறை சார்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினார். பேட்டியின் போது, மண்டல தலைவர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் வின்சென்ட், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.