வரும் 26ல் கிராமசபை கூட்டம் வரவு செலவு தெரிந்து கொள்ளலாம்
அன்னுார்; அன்னுார் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களில், 28 ஊராட்சிகளில், வரும் 26ம் தேதி தனி அலுவலர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், பொகலூர், கஞ்சப்பள்ளி, வடக்கலூர், குன்னத்தூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட 21 ஊராட்சிகளில் வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கொண்டையம் பாளையம், அத்திப்பாளையம், அக்ரஹார சாமக் குளம், கீரணத்தம், கள்ளிப்பாளையம், வெள்ளாணைப்பட்டி, வெள்ளமடை ஆகிய ஏழு ஊராட்சிகளில், வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 5ம் தேதி முடிந்தது. இதையடுத்து தனி அலுவலர்கள் பொறுப்பேற்றனர். தனி அலுவலர்கள் பொறுப்பேற்ற பிறகு முதல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் வருகிற நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும். கடந்த காலாண்டில் செய்யப்பட்ட பணிகளுக்கான வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 'பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்,' என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.