உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டா விவகாரத்தில் ஐகோர்ட் விளாசிய சாட்டை; பட்ட பிறகாவது நிற்குமா அதிகாரிகளின் சேட்டை

பட்டா விவகாரத்தில் ஐகோர்ட் விளாசிய சாட்டை; பட்ட பிறகாவது நிற்குமா அதிகாரிகளின் சேட்டை

சாரல் மழை துாறிக் கொண்டிருந்தது. ரெயின் கோட் அணிந்து கொண்டு, கோவை குற்றாலம் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் சிட்டியை நோக்கி, ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.பின்இருக்கையில் அமர்ந்திருந்த மித்ரா, ''என்னக்கா... 'மாஜி' அமைச்சர் செந்தில்பாலாஜி நம்மூர்ல இருந்தும், மழை பாதிப்புகளை பார்வையிடுறதுக்கு வரலையாமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாப்பா... உண்மைதான்! 'ரெட் அலர்ட்' கொடுத்ததும் மாவட்ட நிர்வாகம் பதற்றமாகிடுச்சு. தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்களை வரவழைச்சிட்டாங்க. சென்னையில இருந்து 'மானிட்டரிங் ஆபீசர்' ஓடோடி வந்தாரு; வழக்கமா பாதிப்பு ஏற்படுற பகுதிக்கு அவரு நேர்ல போயி பார்த்தாரு,''''செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை இழந்ததுக்கு அப்புறம், வேற யாரையும் பொறுப்பு அமைச்சரா நியமிக்காம இருந்தாங்க. ஈரோடு அமைச்சர் முத்துசாமியை ஸ்பாட்டுக்கு போகச் சொல்லி, உத்தரவு வந்திருக்கு. அவரு, அவசர அவசரமா நம்மூருக்கு வந்து, நைட் நேரத்துல ஒவ்வொரு இடமா நேர்ல போயி பார்த்தாரு,''''அரசு விருந்தினர் மாளிகையில மீட்டிங் நடந்துச்சு; கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர், போலீஸ், வருவாய்த்துறை ஆபீசர்ஸ் கலந்துக்கிட்டாங்க. அதுல, மினிஸ்டர் பக்கத்துல செந்தில்பாலாஜி உக்கார்ந்திருந்தாரு. ஸ்பாட்டுகளுக்கு நேர்ல போயி, பார்வையிடுறதை மட்டும் தவிர்த்துட்டாரு...''

ஆளுங்கட்சிக்கு 'வீக்'

''அவரு ஆளுங்கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியா கூப்பிட்டு பேசுனாராமே...''''தற்போதைக்கு அமைச்சர் பதவியை இழந்திருந்தாலும், கட்சியில மண்டல பொறுப்பு கொடுத்து, தொகுதிகளை ஒதுக்கியிருக்காங்க. அதனால, தன்னோட நெருங்குன நட்பு வட்டாரம் மூலமா, நம்ம மாவட்டத்துல இருக்கற, 10 சட்டசபை தொகுதிகள்லயும் 'சர்வே' எடுத்திருக்காரு. அவுங்க கொடுத்த ரிப்போர்ட், 'நெகடிவ்'வா இருந்துருக்கு. மைனஸ் பாயின்ட்டுகளை இனி எப்படி பிளஸ் ஆக்குறதுன்னு, பிளான் போட்டுட்டு இருக்காராம்,''''அதுக்காக... தொகுதிக்கு, 30 நிர்வாகிகளை அழைச்சு பேசியிருக்காரு. தொகுதி நிலவரங்களை கேட்டிருக்காரு. பூத் வாரியா போயி, வாக்காளர் பட்டியலை சரிபார்த்த, 'மஞ்சள் புக்'கை, அவரோட ஆபீசுல ஒப்படைக்கச் சொல்லியிருக்காரு. 25 வருஷ வரலாற்றை மாத்திக் காட்டி, நம்ம மாவட்டத்துல 'சூரியன்' உதிக்குறதுக்கு, 'கரூர் பார்முலா'வை 'பாலோ' பண்ணச் சொல்லியிருக்காராம். நான் சொல்றதை கேட்டுச் செய்யுங்க; ஈஸியா ஜெயிக்கலாம்னு 'அட்வைஸ்' பண்ணுனதா கட்சிக்காரங்க சொல்றாங்க''''அப்புறம்... உதாரணத்துக்கு... லோக்சபா எலக்சன்ல தொண்டாமுத்துார் தொகுதியில தி.மு.க., வாங்குன ஓட்டு, அ.தி.மு.க., - பா.ஜ., வாங்குன ஓட்டுகளை கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டு காண்பிச்சாராம். இந்த மாதிரி, ஒவ்வொரு தொகுதியிலயும் ஆளுங்கட்சி எப்படி 'வீக்'கா இருக்கோம்னு தெளிவுபடுத்தி இருக்காரு. பூத் வாரியா அ.தி.மு.க., - பா.ஜ., வாங்குன ஓட்டுகளை கூட்டிப்பார்த்து, எந்தெந்த ஏரியாவுல 'வீக்'கா இருக்கோம்னு 'லிஸ்ட்' எடுத்து, கவனம் செலுத்தச் சொல்லியிருக்கறதா, உடன்பிறப்புகள் சொன்னாங்க...''

'மிரட்டலில்' அரசியல்

''ஓஹோ... இதை கேள்விப்பட்டதும், 'மாஜி' அமைச்சர் வேலுமணியும் பூத் கமிட்டி கூட்டம் நடத்துனாரா...''''ஆமா, மித்து! இனியும் 'அசால்ட்டா' இருந்தா, ஆளுங்கட்சிக்காரங்க தொகுதிக்குள்ள ஈஸியா நுழைஞ்சிடுவாங்கன்னு உஷாராகிட்டாரு. பூத் கமிட்டிகளை பலப்படுத்துறதுக்கு கட்சிக்காரங்களுக்கு உத்தரவு போட்டிருக்காரு. பூத் கமிட்டி லிஸ்ட்டை கைப்பத்துறதுக்கு, ஆளுங்கட்சிக்காரங்க முயற்சி பண்றாங்க; எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது; உளவுத்துறை போலீஸ்காரங்க கேட்டாலும் கொடுக்கக் கூடாதுன்னு, 'ஸ்டிரிக்ட்டா' உத்தரவு போட்டிருக்காராம்...''''லோக்சபா எலக்சன்ல, சிறுபான்மையினர் ஓட்டு முழுசா, ஆளுங்கட்சிக்கு விழுந்துச்சு. அது மாதிரி, 2026 அசெம்ப்ளி எலக்சன்ல போகக்கூடாதுங்கிறதுக்காக, இனி, அமைப்பு ரீதியா சிறுபான்மையின நிர்வாகிகள்கிட்ட பேசப்போறாங்களாம். அதனால, அசெம்ப்ளி எலக்சன்ல சிறுபான்மையினர் ஓட்டு முழுசா தி.மு.க.,வுக்கு போகாதுன்னு அவரு கட்சிக்காரங்க சவால் விடுறாங்க''

விஜய் கட்சி விறுவிறு

''அதெல்லாம் இருக்கட்டும். 'நீங்க சொல்லுங்க; நாங்க வருவோம்'ன்னு, விஜய் கட்சிக்காரங்க விறுவிறுப்பா செயல்படுறாங்களாமே...''''பொதுமக்கள் சார்ந்த பிரச்னை என்னென்ன இருக்குன்னு, சட்டசபை தொகுதி வாரியா, 'கலெக்ட்' பண்ணிட்டு இருக்காங்க. ஏதாச்சும் பிரச்னை இருந்தா, எங்கள்ட்ட சொல்லுங்கன்னு மக்களை சந்திச்சு பேசிட்டு வர்றாங்க. அவுங்களை தொடர்பு கொள்றதுக்கு வசதியா, த.வெ.க., ஆபீஸ் போன் நம்பர்களை கொடுத்துட்டு வர்றாங்க,''''பொதுமக்களும் ஏரியா பிரச்னைகளை, கவுன்சிலர்கிட்ட சொல்றதை விட, விஜய் கட்சிக்காரங்களுக்கு சொன்னா, நல்லா இருக்கும்னு நெனைக்கிறாங்க. வீட்டுக்கு வீடு விஜய் கட்சி ஆபீஸ் நம்பர் போயிட்டு இருக்கறது கேள்விப்பட்டு, உடன்பிறப்புகள் கலக்கத்துல இருக்காங்க. ஆளுங்கட்சி 'மாஜி' எடுத்த ரகசிய சர்வே 'ரிப்போர்ட்'டுல, விஜய் கட்சிக்கு செல்வாக்கு அதிகமாகிட்டு இருக்கறதை தெரிஞ்சுதான், ஜெயிக்கறதுக்கு வேற ரூட் எடுக்கப் பார்க்குறாராம்,'' என்றபடி, பேரூரில் பேக்கரி முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

கொடியேற்ற அச்சம்

காபி, காளான் பப்ஸ் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''ஆளுங்கட்சி கொடியேத்துறதுக்கு கூட, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தயக்கம் காட்டுனாராமே...'' என கேட்டாள்.''அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்ம மாவட்டத்துல ஆய்வு செய்ய வந்தாரு. பேரூர் பச்சாபாளையத்துல இருக்கற பால்பண்ணைக்கு போயிருக்காரு. ஆளுங்கட்சியை சேர்ந்த ஆவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்காரங்க, கொடியேற்று விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.காரை விட்டு அமைச்சர் இறங்கியதும், 'மாவட்ட செயலாளர் எங்கே; கட்சி நிர்வாகிகளை காணலையே'ன்னு கேட்டாரு. 'அவுங்க இல்லாம கட்சிக்கொடி ஏத்தி, வம்புல சிக்கணுமா'ன்னு, தொழிற்சங்கத்தை சேர்ந்தவங்களை கடிஞ்சு பேசுன அவர், கொடியேற்றாமலேயே கிளம்பிட்டாரு. வேற வழியில்லாம, அங்கிருந்த கட்சிக்காரங்களே கொடியேத்தி சமாளிச்சிருக்காங்க,'' என்றபடி, காளான் பப்ஸ் சுவைத்தாள் சித்ரா.

கட்டப்பஞ்சாயத்து

''போலீஸ் ஆபீசர் பெயரைச் சொல்லி, ஸ்டேஷன்கள்ல கட்டப்பஞ்சாயத்து ஜோரா நடக்குதாமே...''''யெஸ்... நீ சொல்றது கரெக்ட். 'சிவா'ன்னு ஆரம்பிக்கற ஆறெழுத்து ஆசாமி ஒருத்தரு, போலீஸ் உயரதிகாரிகளை எனக்குத் தெரியும்னு சொல்லி, சில போலீஸ்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு, பணம் கொடுக்கல் - வாங்கல், இடப்பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்றாரு. ஸ்டேஷன் போலீஸ்காரங்களையும் மிரட்டி, காரியம் சாதிச்சுட்டு இருக்காராம்.ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன், டிரான்ஸ்பராக விரும்புற போலீஸ்காரங்ககிட்ட, 'டி.ஜி.பி.,யை எனக்குத் தெரியும்; கமிஷனர் ரொம்ப பழக்கம்'னு நைசா பேசி, பணத்தை கறக்குறாராம். இன்ஸ்.,களுக்கு கொடுக்கணும்; ஏ.சி.,க்கு கொடுக்கணும்னு சொல்லி, பணத்தை வாங்கி, ஏமாத்திட்டு இருக்காராம்,''''ஆர்.எஸ்.புரத்துல இருந்த முன்னாள் இன்ஸ்., ஒருத்தரு, ஏ.சி., ஒருத்தரு பெயரை சொல்லி, ஆயிரக்கணக்குல கரன்சி வாங்கியிருக்காரு. இவுங்க ரெண்டு பேரை சொல்லி, கரன்சி வாங்குனது சம்பந்தமா, ஆறெழுத்து ஆசாமி பேசிய ஆடியோ, சமூக வலைதளத்துல வலம் வருது. இனியாவது அந்த ஆசாமி மேல, போலீஸ் கை வைப்பாங்களான்னு பார்ப்போம்,'' என்றபடி, பேக்கரியில் பணம் கொடுத்து விட்டு, வெளியே வந்தாள் சித்ரா.

ரெவின்யூ ஆபீசர்ஸ் 'அப்செட்'

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த மித்ரா, ''பட்டா விவகாரத்துல ஐகோர்ட் காட்டுன கெடுபிடியில, நம்மூர் ரெவின்யூ ஆபீசர்ஸ் 'அப்செட்' ஆகிட்டாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள்.''ஆமா, மித்து! இந்த விவகாரத்துல, ஒட்டுமொத்த ரெவின்யூ டிபார்ட்மென்ட்டே ஆடிப்போயிருக்கு. 10 ஆயிரம் ரூபா பைன் விதிச்சதோட, சொந்த நிதியில இருந்து, பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கணும்னு ஆர்டர் போட்டிருக்கு. இதெல்லாம் ஆபீசர்ஸ் சர்வீஸ் புக்குல பதிவாகுங்கிறதுனால, வருத்தப்படுறாங்க. வடக்குல இருந்த/இருக்கற ஆபீசர்களை முழுசா நம்புனதுனால, வந்த வினைன்னு சொல்றாங்களாம்,''''பட்டா மாறுதல் சம்பந்தமா, ஒவ்வொரு ஆபீசிலும் எத்தனை மனு 'பெண்டிங்'ல இருக்குன்னு 'என்கொயரி' பண்ணிட்டு இருக்காங்க. அத்தனை மனுக்களையும் உடனடியா விசாரிச்சு, தீர்வு காணச் சொல்லியிருக்காங்க...''''சி.எம்., ஊட்டிக்கு வந்திருந்த சமயம்.. அன்னுார் விவசாயி, போராட்ட அறிவிப்பு வெளியிட்ட போதே, ரெவின்யூ ஆபீசர்ஸ் 'அலர்ட்' ஆகியிருக்கணும். அதுவும் வடக்கு கோட்டத்தை சேர்ந்தது தான். லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு தில்லா பதிவு போட்டு, 24 மணி நேரத்துக்குள்ள, பட்டா மாறுதல் வாங்குனாரு. ஆனா, ஐகோர்ட் உத்தரவு போட்டும், பட்டாவுல சட்ட விரோதமா இணைக்கப்பட்ட ரெண்டு பேரை, ரெவின்யூ ஆபீசர்ஸ் நீக்கம் செய்யலை. இதெல்லாம் ஆபீசர்களுக்கு எதிரா திரும்பிடுச்சு,''''பட்டா பிரச்னையில, கடுமையான உத்தரவு பிறப்பிச்ச மாதிரி, கனிம வள கொள்ளை சம்மந்தமான வழக்குகளிலும் அதிரடி தீர்ப்பு வழங்கி, லஞ்சம் வாங்கி, கொழுத்துப் போயிருக்கிற, நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கு சவுக்கடி கொடுக்கணும்னு, இயற்கை ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்குறாங்க...'' என்றாள் சித்ரா.சாரல் மழையில் நனைந்து கொண்டே, அலுவலகத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !