தொழில்துறைக்கு தேவை நிரந்தர தீர்வு; கேட்கிறது மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு
கோவை; 'மிகக் குறுகிய காலத்துக்கு பருத்தி இறக்குமதி மீதான வரி ரத்தை வரவேற்க ஒன்றுமில்லை. நிரந்தர தீர்வு மட்டுமே தொழில்துறைக்கு ஊக்கம் தரும்' என, ஆர்.டி.எப்., அமைப்பு தெரிவித்துள்ளது. மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு (ஆர்.டி.எப்.,) தலைவர் ஜெயபால் கூறியதாவது: அமெரிக்க வரி விதிப்பு, வங்கதேச எழுச்சி போன்ற பிரச்னைகளோடு ஒப்பிட்டு, தற்போதைய பருத்தி இறக்குமதி மீதான, 11 சதவீத வரியை தற்காலிகமாக மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் 5.5 கோடி ஸ்பிண்டிலேஜ்கள் உள்ளன. இவற்றுக்கு சர்வதேச விலையில் மூலப்பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இறக்குமதி வரி மூலப்பொருளின் சர்வதேச விலைக்கு நிகராகவே இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதை, தொழில்நுட்பத்தை வழங்கி, பருத்தி உற்பத்தியை அதிகரித்து, அவர்களின் வருவாயைப் பெருக்க வேண்டியது அரசின் கடமை. பருத்திப் பஞ்சு, 26 நிலை களைத் தாண்டியே துணியாக மாறுகிறது. அத்தனை நிலைகளில், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் நிலையையும் யோசிக்க வேண்டும். பருத்தி மட்டுமல்ல, அனைத்துத் தொழில்களுக்கான மூலப்பொருள்களும் சர்வதேச விலையில் கிடைக்க வேண்டும். இந்த அடிப்படையில், புதிய தொழிற்கொள்கை வகுக்கப்பட வேண்டும். தொழிற்துறைக்குத் தேவை நிரந்தரத் தீர்வு. தற்காலிக அறிவிப்புகள் அல்ல. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.