கோவை; கோவையிலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதி மட்டும் தற்போது பா.ஜ., வசம் இருக்கும் சூழலில், வரும் சட்டசபை தேர்தலில் அதை இரண்டாக உயர்த்துவதற்கான பணிகளை துவக்க, கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வசம் ஒன்பதும், பா.ஜ.,வசம் ஒரு தொகுதியும் உள்ளது. இது போதாது; வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வசம் இரண்டு சட்டசபை தொகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பு பணிகளை துவக்க வேண்டும். தே.ஜ.,கூட்டணியை வழிநடத்தும் அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் பா.ஜ.,வினர் தற்போது சுறுசுறுப்பாகி உள்ளனர். வெற்றி வாய்ப்புள்ளது
கோவை வடக்கு தொகுதி தற்போது அ.தி.மு.க.,வசம் உள்ளது. நல்ல அரசியல் கட்டமைப்பை கொண்டுள்ளது. அதனால் பா.ஜ.,வினர் இணைந்து பணியாற்றும் போது, வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இத்தொகுதியில், பா.ஜ.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர் போட்டியிடுவார். அதற்கு தகுந்தாற் போல், 22 வார்டுகளை கொண்ட வடக்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டுகளையும் நான்கு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கமிட்டி உருவாக்கி, பணி மேற்கொள்ள பா.ஜ.,முடிவு செய்துள்ளது. இது குறித்து, பா.ஜ.,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது: யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து, கட்சி தலைமை அறிவிக்கும். அதற்கு முன்னதாக கட்சி ரீதியான பணிகளை துவக்கி விட்டோம். கோவையில் எங்கள் வசம் தெற்கு தொகுதி உள்ளது. அதில் மேலும் சிறப்பாக பணிபுரிவோம். கோவை வடக்குத்தொகுதியில் வாக்காளர்களின் ஒட்டுமொத்த ஆதரவு உள்ளது. கடந்த லோக்சபா ஓட்டுப்பதிவை பார்க்கும் போது, இதை புரிந்து கொள்ளலாம். ஐ.டி.,விங் வருகை
அதனால் தெற்கை தொடர்ந்து, வடக்கில் கட்சிப்பணிகளை துவக்கியிருக்கிறோம். இதற்காக தகவல் தொழில்நுட்ப குழுவினர் கோவை வந்துள்ளனர். அவர்கள் செயற்கை கோள் தொடர்பு வாயிலாக தரவுகளை சேகரித்து, புதிய 'டேட்டாபேஸ்' உருவாக்கி வருகின்றனர். அதன் அடிப்படையில், வாக்காளர்களை நாங்கள் வீடு வீடாக சந்தித்து பேச இருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறுவோம். தமிழக அரசு மக்களுக்கு இழைத்துள்ள அநீதிகளை உரக்கச்சொல்லுவோம். இவ்வாறு, ரமேஷ்குமார் கூறினார்.
தேர்வு செய்தது எதனால்?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் மொத்தம், 1,98,641 ஓட்டு பதிவாகியிருந்தது. அதில் பா.ஜ.,வுக்கு 71,174 ஓட்டுக்கள் பதிவாயின(35.83 சதவீதம்).அ.தி.மு.க, 28,998 ஓட்டுக்களும் (14.60 சதவீதம்), நா.த.க., 12,496 ஓட்டுக்களும்(6.29 சதவீதம்) பெற்றிருந்தன. தி.மு.க., 80,963 ஓட்டுக்கள்(40.76 சதவீதம்) பெற்றிருந்தது. வெற்றி பெற்ற தி.மு.க.,வை விட பா.ஜ.,வுக்கு, 4.93 சதவீதம் ஓட்டுக்களே குறைவு. அதனால் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் இணைந்து போட்டியிட்டால், வடக்கு தொகுதி பா.ஜ.,வசமாகும் என்பது, பா.ஜ.,வின் நம்பிக்கை. அதனால் கோவை வடக்கு தொகுதியை, பா.ஜ.,வினர் தேர்வு செய்துள்ளனர்.