குடியிருப்புகளில் போலீசார் சோதனை
கோவை; கோவை மாநகர உதவி கமிஷனர், அஜய் தங்கம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., கள், போலீசார், ஆயுதப்படை போலீசார், 50 பேர் கொண்ட குழுவினர் செல்வபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அங்குள்ள வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போலீசார் ஐந்து குழுக்களாக பிரிந்து 1,303 வீடுகளில் சோதனை நடத்தினார்கள். பீரோ, அலமாரிகள், சூட்கேஸ், பேக்குகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டது.இதில் அங்கிருந்த ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்த சுதர்சன், 64, ஷேக் இப்ராஹிம், 33 ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.