உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை வருது... மழை வருது கோடை உழவு செய்யலாம் வாங்க!

மழை வருது... மழை வருது கோடை உழவு செய்யலாம் வாங்க!

கோவை: மாவட்டத்தில், கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், கோடை உழவு செய்து பயனைடைய, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 611 மி.மீ., மழை பெறப்படுகிறது. கடந்த ஆண்டு 822 மி.மீ., மழை பெய்தது. ஏப்ரலில் சராசரியாக 36 மி.மீ., மழையும், மே மாதத்தில் 88 மி.மீ., மழையும் பெறப்படுகிறது.நடப்பாண்டில் நேற்று முன்தினம் வரை, 17 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கூடுதலாக மழை பெய்ததும், விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்.கோடை உழவு செய்யும்போது, ஐந்து கொத்து கலப்பை கொண்டு சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும். கடைசி விதைப்பு உழவை, சரிவுக்கு குறுக்காக முடிக்க வேண்டும்.இவ்வாறு, கோடை உழவு செய்வதால், மழை நீர் வெளியே செல்லாமல், வயலில் இறங்கும். முழுமையாக சேமிக்கப்படும். எளிதில் ஆவியாகாது. முளைக்கும் களைச்செடிகள் வறண்டுவிடும்.அதில் இருக்கும் பூச்சிகளின் முட்டைகள் அழிந்து விடும். நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் நிலங்களில், சிவப்புக் கம்பளிப்புழு மற்றும் அமெரிக்கன் படைப்புழு ஆகியவற்றின் கூட்டுப் புழுக்கள், மண்ணின் மேற்பரப்புக்கு வந்துவிடும்.அதன் பின், இவை வெயிலின் தாக்கத்தால் இறந்து விடும். பறவைகளும் இவற்றை அழித்து விடும். இதனால், பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் பூச்சித் தாக்குதல் குறைந்து விடும்.கோடை உழவினால் மண்ணில் அடியுரம் குறையாமல் இருக்கும். மண்ணில் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கும். விதைகளின் முளைப்புத் திறன் அதிகரித்து, பயிர் எண்ணிக்கை சரியான அளவில் இருக்கும்.மழை நீர் வயல்களில் சேமிக்கப்படுவதால், மண் அரிப்பு ஏற்படாமல், மண் வளம் காக்கப்படுகிறது. ஆகவே, உரிய காலத்தில் கோடை உழவு செய்து, விவசாயிகள் பயனடைய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ