குளத்தை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்: வேருடன் தோண்டி அகற்ற வலியுறுத்தல்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, கோதவாடி குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் தோண்டி அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். கிணத்துக்கடவு அருகே, கோதவாடி குளம், 312.72 ஏக்கர் பரப்பளவில், 2 மதகுகளுடன் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், இரண்டு முறை பி.ஏ.பி., உபரி நீர் குளத்திற்கு விடப்பட்டது. இதில் முதல் முறை 41 நாட்களில் குளம் முழுவதுமாக நீர் நிரப்பப்பட்டது. இரண்டாவது முறை, 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் வரத்து இருந்தது. இதில், 10 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. இந்த குளத்தை பி.ஏ.பி., உபரி நீர் கொண்டு நிரப்ப வேண்டுமென பல அதிகாரிகளிடம் முறையிட்டும், மனு வழங்கியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. குளத்திற்கு, தண்ணீர் விட சாத்தியக்கூறுகள் இருந்தும், குளத்தில் தண்ணீர் நிரப்ப போதிய தொழில்நுட்ப வசதி இல்லை என, ஒரே பதிலையே அதிகாரிகள் கூறி வருகின்றனர். தற்போது, பருவமழை துவங்கி மழை பெய்து வருவதால், குளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், குளத்தில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் இருப்பதால், குளத்தில் தேங்கிய நீர், ஒரு சில மாதங்களிலேயே வற்றிப்போக அதிக வாய்ப்புள்ளது. சீமை கருவேல மரங்கள் இருப்பதால் காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. இந்த மரத்தால், குளத்தில் தேங்கும் நீர் விரைவில் வற்றுவதுடன், நிலத்தடிநீரும் அதிகம் உறிஞ்சப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் நலன் கருதி, குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் தோண்டி அகற்றம் செய்ய வேண்டும். விவசாயிகள் கூறியதாவது: கோதவாடி குளத்தை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து அவ்வப்போது சுத்தம் செய்கிறோம். ஆனால், சீமை கருவேல மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதனால், விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்து செல்வது சிரமமாக உள்ளது. குளத்தில் தண்ணீர் நிரப்ப அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை. இந்நிலையில், குளத்தில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரத்தையாவது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோதவாடி குளத்தை சுத்தம் செய்ய நிதி வழங்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். மேலும், தனியார் அமைப்பு சார்பில் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக யாரேனும் சுத்தம் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு என்.ஓ.சி., வழங்கப்படும்,' என்றனர்.