உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் சில்லுன்னு மாறிய சீதோஷ்ணம்; மானாவாரிக்கு உதவிய மழை

மழையால் சில்லுன்னு மாறிய சீதோஷ்ணம்; மானாவாரிக்கு உதவிய மழை

உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நேற்று பெய்த சாரல் மழையால், சீதோஷ்ண நிலை குளுகுளுவென மாறியது; மானாவாரி சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நெருங்கியதன் காரணமாக, நேற்று உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில், பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் சாரல் மழை தொடர்ச்சியாக பெய்ததால், சீதோஷ்ண நிலை குளுகுளுவென மாறியது.பகல் முழுவதும் வெயில் இல்லாமல், தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பயிரின் வளர்ச்சி தருணத்தில், பெய்யும் மழை சாகுபடிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.பி.ஏ.பி., மற்றும் அமராவதி அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், தொடர் மழை பெய்தால், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வாய்ப்புள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நேற்று காலை முதலே சாரல் மழை தொடர்ந்தது. இதனால், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் என, பலரும் பாதிக்கப்பட்டனர்.மழையை எதிர்கொள்ள தயாராகும் வகையில் பலரும், குடை, ஜர்க்கின், ரெயின்கோட் உள்ளிட்டவைகளை கையோடு எடுத்துச் சென்றனர். பகல் முழுவதும் மழையின் தாக்கம் இருந்ததால், குளிர் சீதோஷ்ண நிலை நிலவியது. மக்கள் குடை பிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் அன்றாட பணிகளை தொடர்ந்தனர்.

வால்பாறை

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று காலை முதல் சாரல்மழை பெய்தது. வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்த மழையால் சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சாரல்மழை பெய்யும் நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை. 138.93 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 51 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 405 கனஅடி தண்ணீர் வீதம் மின் உற்பத்திக்காக திறந்து விடப்படுகிறது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை