உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மயானங்கள் இருக்கு... நிதி இல்லை!

மயானங்கள் இருக்கு... நிதி இல்லை!

மனிதனுக்கு உறைவிடம் எவ்வளவு முக்கியமோ,- அந்த அளவுக்கு 'உயிர் நீத்தார் உறைவிடமும்' முக்கியம். துரதிருஷ்டவசமாக பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகள் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.கழிப்பறை வசதிகளைப் போலவே, மயான வசதிகளையும், உள்ளாட்சி அமைப்புகள் புறக்கணிக்கின்றன. மயானங்களை மேம்படுத்தி, அனைத்து வசதிகளையும் செய்து, பராமரிக்க போதுமான நிதியை ஒதுக்குவதில்லை.தமிழகத்தில் மயான மேற்கூரை ஊழல் நடந்தது அம்பலமாகி, பரபரப்பானது. ஆனால், தற்போது, மயானங்கள் அனைத்தும் புதர் மண்டி, அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.பொள்ளாச்சி நகராட்சி மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், மொத்தம், 259 மயானங்கள் உள்ளன. மயானங்கள் அனைத்தும் புதர்மண்டியே காணப்படுகிறது. சடலங்களை அடக்கம் செய்வதற்குக் கூட இடமில்லாத வகையில், முட்புதர்கள் நிறைந்துள்ளன.அனைத்து மயானங்களும், சடலத்தை காத்திருந்து எரிக்கும் வகையில் சுற்றுச்சுவர், போதிய தண்ணீர், மின்விளக்குகள் என, அடிப்படை தேவைகள் இன்றியே காட்சியளிக்கின்றன.சிதிலமடைந்த தகன மேடைகளில், சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிதறிக் காணப்படுகிறது.தற்போது நகரங்களில், தனியார் அறக்கட்டளை வாயிலாக, 'மின் மயான எரிமேடை' வசதி செய்யப்பட்டிருக்கிறது. இவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி வந்தாலும், இந்த வசதி கிராமங்களில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.இறந்தவர்களை எடுத்து வரும் உறவினர்களே, மயான இடத்தை சுத்தம் செய்து, சடலத்தை அடக்கம் செய்கின்றனர். சில இடங்களில், மயானங்கள், குப்பை கொட்டும் பகுதியாக உருமாறியுள்ளது. மயானங்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்மயானம் தேவை

வால்பாறை நகரில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், மொத்தம், 56 மயானங்கள் உள்ளன.வால்பாறை அரசு மருத்துவமனை பின்பகுதியில், மூன்று ஏக்கரில் ஹிந்துக்கள் மயானம் உள்ளது. இறந்தவர்களின் உடலை புதைக்க போதிய இடவசதி இல்லாததால் சிரமம் ஏற்படுகிறது. மயானம் புதர் சூழ்ந்து காணப்படுவதால், பகல் நேரத்தில் சிறுத்தை பதுங்கி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.மேலும், ஹிந்துக்களுக்கான மயானம் மிகவும் குறுகலாக உள்ளது. இங்கு, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்த பின், கல்லறை கட்டுகின்றனர். இதனால் மேலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மயானத்தை விரிவுபடுத்தி, மின்மயானம் அமைக்க வேண்டும். சடங்கு செய்வதற்கு ஏற்ற கட்டடம் கட்ட வேண்டும்.

உடுமலை

உடுமலை ஒன்றியத்தில் - 38, குடிமங்கலத்தில் - 23, மடத்துக்குளத்தில் - 11 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், இறந்தவர்களின் இறுதிச்சடங்கு செய்வதற்கு, மயானம் உள்ளது. மொத்தம், 208 மயானங்கள் உள்ளன. பல கிராமங்களில், மயானம் பெயரளவில்தான் உள்ளது.பராமரிப்பில்லாமல் உள்ள மயானங்களில் முட்செடிகள், பார்த்தீனிய செடிகள் வளர்ந்து உள்ளன. திறந்த வெளிக்கழிப்பிடங்களாகவும் மாறியுள்ளன. மயானங்கள் பராமரிப்பில்லாமல் இருப்பதால், வேறு வழியின்றி, நகரிலுள்ள மின் மயானங்களுக்கு சடலங்களை கொண்டு செல்கின்றனர்.பராமரிப்பில்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், மயானங்கள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், உரம் தயாரிப்பதற்கான குடில்களும், பெரும்பான்மையான கிராமங்களில், மயானத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளன.கிராமங்களில் சுகாதார வளாகம் அமைப்பதற்கு, அரசின் சார்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மயானங்களை பராமரிப்பதற்கென சிறப்பு நிதிஒதுக்கீடு இல்லை. மயானங்களை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஊராட்சி நிர்வாகங்கள் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேம்படுத்த அரசு மனசு வைக்கணும்!

அதிகாரிகள் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகள் தோறும், ஒவ்வொரு சமூகத்தினருக்கு ஏற்றாற்போல் மயானங்கள் உள்ளன. மயானம் பராமரிப்புக்கென, தனி நிதி ஒதுக்கீடு கிடையாது. அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, உள்ளாட்சி பொது நிதி வாயிலாக, மயானம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதிலும், நமக்கு நாமே திட்டம், தன்னார்வ அறக்கட்டளைகளை ஒன்றிணைத்தே மயானங்கள் பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே, பெரும்பான்மையான மயானங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுக்கு, 800 முதல் 900 இறப்புகள் பதிவாகின்றன. சிலர் மட்டுமே அவரவர், சமூக வழக்கப்படி, மயானங்களில் சடலங்களை புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர். பெரும்பாலானவர்கள், மின் மயான எரிமேடையை பயன்படுத்துகின்றனர்.உடுமலையில், சமத்துவ மயானங்கள் பராமரிப்பதற்கு மட்டுமே, அரசு நிதிஒதுக்கீடு செய்கிறது. ஆனால், மற்ற மயானங்களை, ஊராட்சி பொது நிதியை கொண்டு பராமரிக்க வேண்டியுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உட்பட மற்ற திட்டங்களின் கீழ், ஊராட்சியில் உள்ள மயானங்களை மேம்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், முழுமையாக பராமரிக்க முடியும். இவ்வாறு, கூறினர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி