உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மனுக்கள் ஏராளம்; தீர்வுதான் காணோம்

 மனுக்கள் ஏராளம்; தீர்வுதான் காணோம்

கோவை: வாரம்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தாலும், மக்களின் பிரச்னைகள் மட்டும் குறைந்தபாடில்லை. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 1,226 மனுக்கள் பெறப்பட்டன. வருவாய் துறை சார்ந்து 791 மனுக்கள் பெறப்பட்டன. வேண்டாம் மதுக்கடை சிங்காநல்லூர் பகுதியில் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் உள்ள டவுன்ஷிப் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனு அளித்தவர்கள் கூறுகையில், “எங்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே 100 மீட்டர் தொலைவில் மதுக்கடை உள்ளது. அப்பகுதியில் தனியார் பள்ளியும் உள்ளது. புதிதாக மதுக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. இது மாணவர்களின் நலனை பாதிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும்,” என்றனர். 'மகளுக்காக அலைகிறேன்' ரத்தினபுரியை சேர்ந்த ரத்னா கூறுகையில், “மனவளர்ச்சி குறைபாடுள்ள எனது மகளுக்கு ஆதார் அட்டை பெற பல முறை விண்ணப்பித்தும் பலன் இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இ--சேவை மையத்திலும் பல முறை விண்ணப்பித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் ரூ.100, ரூ.50 என விண்ணப்ப கட்டணம், ஆட்டோ வாடகை என செலவழித்தது தான் மிச்சம். நிரந்தர தீர்வு கிடைக்காதா?” என்று கேட்டார். கவுண்டம்பாளையம் ஏ.கே.ஆர். குடியிருப்போர் பொதுநலச் சங்கத்தினர், குடியிருப்பு நிலத்தில் அனுமதி இன்றி பள்ளிவாசல் கட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். மருத்துவ உதவி மற்றும் பட்டா தொடர்பான பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் பலர் மனுக்கள் அளித்தனர்.

சில நாள் மட்டுமே கிடைத்த

மகளிர் உதவித்தொகை

மகளிர் உரிமைத்தொகை கோரி, மனுக்கள் தொடர்ந்து வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களுக்காக ஆண்களும் மனு அளித்தனர். கரட்டுமேடு ஹவுசிங் யூனிட்டில் வசிக்கும் ஜெயா கூறுகையில், “மகளிர் உரிமைத்தொகை சில நாட்கள் மட்டுமே கிடைத்தது. அதன் பிறகு நிறுத்தப்பட்டது. பலமுறை அலுவலகத்திற்கு சென்றும் பயனில்லை. அது கிடைக்கவில்லை என்றால், ஆதரவற்ற முதியோர் உதவித்தொகையாவது கிடைக்குமா? நடக்க முடியாத நிலையில், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வாழ்ந்து வருகிறேன். ஆதரவற்றோருக்கு உதவித்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை