உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடுப்பணைகளை தூர்வார நிதி இல்லை.. நீர்வளத்துறை கைவிரிப்பு! தடாகம் வட்டார விவசாயிகள் விரக்தி

தடுப்பணைகளை தூர்வார நிதி இல்லை.. நீர்வளத்துறை கைவிரிப்பு! தடாகம் வட்டார விவசாயிகள் விரக்தி

பெ.நா.பாளையம்; தடாகம் வட்டாரத்தில் உள்ள தடுப்பணைகளை தூர்வார, நீர்வளத்துறையிடம் போதுமான நிதி இல்லை என்ற தகவல், தடாகம் பகுதி விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடக்கு, தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, காளையனூர், மடத்தூர், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வேளாண் நிலங்கள் உள்ளன. இங்கு தென்னை, வாழை பிரதான பயிர்களாக பயிரிடப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்று பாசனம் பிரதானமாக இருந்தது. தற்போது, ஆழ்குழாய் பாசனம் முதன்மை இடத்தை வகிக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவுவது போல இப்பகுதியில் வேகமாக ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்து வருகிறது. மேலும், வனவிலங்குகளின் தொல்லையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு இப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் நிலத்தடி நீரும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதால், விவசாயத்துக்கு மட்டும் இல்லாமல், கால்நடை வளர்ப்புக்கான பயிர்களை வளர்ப்பதிலும், விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தடாகம் வட்டாரத்தில், 50 முதல், 100 வரை உள்ள சிறிய மற்றும் பெரிய தடுப்பணைகளை தூர்வாரி, நிலத்தடி நீரை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு கூறுகையில், தடுப்பணைகளை தூர்வார நீர் வளத்துறை, தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை என தெரிவித்து விட்டது. தொடர்புடைய ஊராட்சி, பேரூராட்சி வாயிலாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பணைகளை தூர்வார மகாத்மா காந்தி, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், நீர்வளத்துறை ஊராட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது. ஆனால், இதுவரை அரசு சார்பில் இப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் தூர்வாரப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளான எங்களுக்கு உரிய அனுமதி வழங்கினால், நாங்களே எங்களுடைய சொந்த செலவில், வருவாய் துறையினர் மேற்பார்வையில், தடுப்பணைகளை தூர்வாரி, அதில் கிடைக்கும் மண்ணை இப்பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணறுகளை மூட பயன்படுத்திக் கொள்வோம். இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவது தடுக்கப்படுவதோடு, பருவ மழை காலங்களில் தடுப்பணைகளில் நீர் நிறைந்து, நிலத்தடி நீரும் பெருகி, விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் அது உதவியாக இருக்கும். இதை செயல்படுத்த கோவை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி