உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை; ஆனால் தேர்வு மட்டும் நடந்தது

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை; ஆனால் தேர்வு மட்டும் நடந்தது

வால்பாறை; வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும், மாணவர்கள் உடற்கல்வி தேர்வு எழுதி வருகின்றனர். வால்பாறையில், 71 துவக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், நான்கு உயர்நிலைப்பள்ளி, ஐந்து மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம், 94 பள்ளிகள் உள்ளன.இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு கடந்த, 15ம் தேதி துவங்கியது. கடந்த 17ம் தேதி உடற்கல்வி தேர்வும் நடைபெற்றது. ஆனால், வால்பாறையில் பெரும்பலான நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லை. ஆனாலும் மாணவர்கள் உடற்கல்வி பாடத்துக்கான காலாண்டு தேர்வு எழுதியுள்ளனர். பெற்றோர்கள் கூறியதாவது: வால்பாறையில் மொத்தம், 14 நடுநிலைபள்ளிகள் உள்ளன. இதில், முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் மட்டும் தான் உடற்கல்வி ஆசிரியர் உள்ளார். மீதமுள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. இதனால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமலும், உடற்கல்வி பாடத்திற்கான தேர்வு எழுத முடியாமலும் தவிக்கின்றனர். கல்வியை போல உடல் ஆரோக்கியமும் முக்கியம். அதனால், காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு, கூறினர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நுாறு மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் சரிந்து கொண்டே வருவதால், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை