உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறுக்கு சுற்றுலா வந்த சென்னை கல்லுாரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

ஆழியாறுக்கு சுற்றுலா வந்த சென்னை கல்லுாரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆழியாறுக்கு சுற்றுலா வந்த, சென்னையைச்சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவர்கள், மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இது குறித்து, ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை பூந்தமல்லி தண்டலம் பகுதியைச்சேர்ந்த சவீதா பிசியோதெரபி கல்லுாரியில் பயிலும், 28 மாணவ, மாணவியர், கல்லுாரியின் கிளினிக்கல் தெரபிஸ்ட் சந்தோஷ், 23 என்பவரது தலைமையில், நேற்றுமுன்தினம் காலை, 6:30 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வாயிலாக, சென்னையில் இருந்து கோவைக்கு வந்தனர். தனியார் மாலுக்கு சென்றுவிட்டு பின்னர் கோவையில் தனியார் கல்லுாரிக்கு சென்றனர்.நேற்று காலை, இரண்டு சுற்றுலா வாகனத்தில் ஆழியாறு பகுதிக்கு சுற்றுலா வந்தனர். ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே ஆற்றில் அவர்கள் குளித்துக்கொண்டு இருந்தனர்.எதிர்பாராதவிதமாக பி.எஸ்.சி., பிசியோதெரபி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சென்னை திருவொற்றியூர் ஜோசப் ஆண்டன் ஜெனிப், 21, திருநெல்வேலியை சேர்ந்த ரேவந்த், 21, மூன்றாம் ஆண்டு மாணவர் சென்னையை சேர்ந்த தருண் விஸ்வரங்கன், 19 ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர்.இதையடுத்து மற்ற மாணவர்கள், நீரில் அடித்துச்செல்லும் மாணவர்களை காப்பாற்ற சப்தம் போட்டனர். மாணவர்கள் சப்தம் கேட்டு ஆழியாறை சேர்ந்த நாகேஷ் உதவியுடன் மூன்று பேரது உடலும் மீட்கப்பட்டது. கண் எதிரே நண்பர்கள் மூவர், நீரில் மூழ்கி இறந்ததை கண்ட நண்பர்கள் கதறி அழுதனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.ஆழியாறு ஆற்றுப்படுகையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி தண்ணீரில் குளிப்பது தொடர்கிறது.வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப்பயணியரும், தண்ணீரில் குளிக்க ஆர்வம் காட்டுவதால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை