காலம் பொன் போன்றது: அண்ணாமலை பேச்சு
பெ.நா.பாளையம்: இளைஞர்கள் தங்களுடைய கல்லூரி காலத்தில், காலத்தை வீணாக்காமல் படித்து முன்னேற வேண்டும் என, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யு.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடந்தது. இதில், பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில்,' மாணவர்கள், கல்லூரி காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த இடங்களில் பணியில் அமர வேண்டும். கல்லூரியில் நீங்கள் படிக்கும் இந்த நான்கு ஆண்டுகள், உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம். அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இணையத்தின் வாயிலாக உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். உலக தலைவர்களின் நடவடிக்கைகளை முழுமையாக அறிந்து வைத்திருப்பது நல்லது. தினசரி டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் வாயிலாக நம்முடைய வாழ்க்கை முன்னேற்றம் அடையும்'' என்றார். விழாவில், யு.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சண்முகம், மாணவர்களின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.