மொபைல் போன்கள் மீட்பில் திருப்பூர் போலீஸ் முதலிடம்
-- நமது நிருபர் -: மொபைல் போன்கள் மீட்பு பணியில், மாநில அளவில் திருப்பூர், 15.வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முதலிடத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மொபைல் போன்கள் திருடு போவது, காணாமல் போவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் பறிபோன மொபைல் போன்களை முடக்குதல், கண்டறிதல் மற்றும் மீட்பு பணிக்காக, மத்திய அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அவ்வகையில், இதற்காக தனித்தளம் உருவாக்கப்பட்டு, போலீஸ் துறை வாயிலாக அவை பயன்படுத்தி மொபைல் போன்கள் மீட்கும் பணி நடக்கிறது. இந்த தளத்தைப்பயன்படுத்தி, அதிகளவிலான நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட அளவிலான போலீஸ் அமைப்பு மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தொலை தொடர்பு துறை சார்பில் விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து இதில் சிறப்பாகப் பணியாற்றிய மூன்று மாவட்டங்கள் மற்றும் மூன்று போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் இதனை வழங்கினார். மாவட்ட அளவிலான இரண்டாம் இடத்தை திருப்பூர் மாநகர போலீஸ் பிரிவு பெற்றுள்ளது. இதற்கான விருதை இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சேவியோ பெற்றுக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷன் அளவில் முதலிடத்தை திருப்பூர் மாநகரம், 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பெற்றுள்ளது. அவ்விருதை தலைமை காவலர் சத்தியேந்திரன் பெற்றுக் கொண்டார்.