உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய வாக்காளராக இணைய... உறுதிமொழி:தேர்தல் ஆணையம் நிபந்தனை

புதிய வாக்காளராக இணைய... உறுதிமொழி:தேர்தல் ஆணையம் நிபந்தனை

கோவை:புதிய வாக்காளர்களாக இணைய விரும்பும், 18 வயது பூர்த்தியானவர்கள், இனி தேர்தல் கமிஷன் விதிக்கும் மூன்று நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில், 6.5 லட்சம் பேர் நீக்கப்பட்ட பின், 25,74,608 வாக்காளர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். தேர்தல் பிரிவினர் கூறியதாவது: பெயர் விடுபட்டவர்கள், புதிதாக சேர்க்க விரும்புவோர், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு, படிவம் 6 உடன், உறுதிமொழி படிவம் வழங்கப்படுகிறது. தந்தை, தாய் மற்றும் முந்தைய திருத்தப் பணியின் போது வாக்காளரின் உறவினரை பற்றிய தகவல் கோரப்படுகிறது. முக்கியமாக மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வேறெந்த நாட்டிலும் குடியுரிமை பெறவில்லை. படிவம் 6 மூலம் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் எனது பெயர், வேறு சட்டசபை, லோக்சபா தொகுதிகளில் இடம் பெறவில்லை. 'தவறான தகவல்களை அளித்திருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 (1950-ன் 43) பிரிவு 31 கீழ் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதை அறிவேன்' என்கிற உறுதிமொழி அளித்து, கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

சரிபார்க்க வேண்டும்

நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள், வேறிடங்களில் வசிக்கலாம். அவ்விடத்தைச் சேர்ந்த ஓட்டுச்சாவடியில் பெயரை சேர்க்க வேண்டும். அதனால், வரைவு வாக்காளர் பட்டியலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலோ அல்லது இணைய தளத்திலோ சரி பார்க்க வேண்டும். பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தால், ஒரு மாத அவகாசத்தில் மீண்டும் விண்ணப்பித்து, ஓட்டுரிமையை பெற வேண்டும். ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களின் பெயர்கள் பக்கத்து ஓட்டுச்சாவடிக்கு மாறியிருக்கலாம் என்பதால், வரைவு பட்டியலை அனைவரும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி