தக்காளி கூழ் தயாரிப்பு வாகனத்திட்டம் தோல்வி
- நமது நிருபர் -கோவையில் விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட தக்காளி கூழ், ஜாம் தயாரிப்பு வாகனம், போதிய பயன்பாடு இன்மையால் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.40 லட்சம் மதிப்பில் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களுக்கு நடமாடும் தக்காளி கூழ் தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. இதில், தக்காளி சாஸ் மற்றும் ஜாம் தயாரிக்க, ஐந்து இயந்திரங்கள் இருந்தன.கோவையில் இந்த வாகனம், வெள்ளியங்கிரி விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்திடம், மாத வாடகை, நான்காயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதன் பயன்பாடு எளிதாக இல்லை என்றும், தயாரிப்பு செலவினங்கள் அதிகம் என்றும், விவசாயிகள் இதனை பயன்படுத்தாமல் இருந்தனர்.இந்நிலையில், இவ்வாகனம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், ''நடமாடும் தக்காளி கூழ், ஜாம் தயாரிப்பு வாகனத்தில் பெரிய அளவில் உற்பத்தி செய்ய இயலாது. டன் கணக்கில் உற்பத்தியாகி வரும் பொழுது, இந்த வாகனத்தால் பெரிய பயன்பாடு இல்லை. இதில் தயாரிப்பு செலவினங்களும் அதிகம் என்பதால், விவசாயிகள் இதனை விரும்பவில்லை,'' என்றார்.வேளாண் விரிவாக்க வணிகப்பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இவ்வாகனம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டு விட்டது. வேறு என்ன பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறித்து, சென்னையில் இருந்தே தெரிவிக்க வேண்டும்' என்றார்.