குளுகுளு சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
வால்பாறை : கோடை சீசன் துவங்கிய நிலையில் வால்பாறைக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானலுக்கு 'இ-பாஸ்' பெற்று செல்லும் நடைமுறை உள்ளதால், வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.வால்பாறையில் கோடை மழை பெய்து வரும் நிலையில், தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளது. பள்ளிகள் விடுமுறையாலும், கோடை சீசன் துவங்கியதாலும், சுற்றுலா பயணியர் குடும்பத்துடன் வருகின்றனர்.பகல் நேரத்தில் யானை, காட்டுமாடு, வரையாடு, சிங்கவால் குரங்குகளையும், அரிய வகை பறவைகளையும் கண்டு ரசிக்கின்றனர்.மேலும், நீர்வீழ்ச்சிகள், காட்சிமுனை, அணைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணியர் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.ஆனால், வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்வதால், நிறுத்த இடம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும், அவதிப்படுகின்றனர். குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், போதிய வசதிகள் செய்துதர வேண்டும் என்பது, சுற்றுலா பயணிரின் எதிர்பார்ப்பாக உள்ளது.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை நகரில் கார் பார்க்கிங் வசதிக்காக, 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கார் பார்க்கிங் மற்றும் ஸ்டேடியம் கட்டப்படவுள்ளது. நகராட்சி பூங்கா, அம்மா படகு இல்லங்களில் சுற்றுலா பயணியருக்கான அடிப்படை வசதிகள் விரைவில் செய்துதரப்படும்.சுற்றுலா வருவோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அண்ணாதிடல், ஸ்டேன்மோர் ரோடு, நல்லகாத்து ரோடு உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த தற்காலிமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.