உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா பயணியர் மனம் குளிரணும்!

சுற்றுலா பயணியர் மனம் குளிரணும்!

பரமசிவம், உடுக்கம்பாளையம்: ஊட்டி, கொடைக்கானல் செல்ல செலவு அதிகம் ஏற்படுகிறது. மேலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், ஆழியாறு, திருமூர்த்தி அணையில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால், இப்பகுதியில் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. பார்க், சிலைகள், செயற்கை நீர் ஊற்றுகள் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. அணையில் மீண்டும் படகுசவாரி துவங்கி கூடுதல் படகுகள் இயக்க வேண்டும். அருவிகளில் குளிக்க பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறைகள் கூடுதலாக அமைக்க வேண்டும். வண்ண மீன் காட்சியகத்தை புதுப்பித்து, சுற்றுலா பயணியர் நீங்கா நினைவுகளுடன் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீபா, சூளேஸ்வரன்பட்டி: பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை, பூங்கா, கவியருவி, டாப்சிலிப் என சுற்றுலா பகுதிகள் நிறைய உள்ளன.ஆனால், பொள்ளாச்சியை, மாவட்டமாகவும், சுற்றுலா தலமாகவும் அறிவிக்க நடவடிக்கை இல்லை. இயற்கை சூழல் நிறைந்த ஆழியாறு அணையில், பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மலம்புழாவில் உள்ளது போன்று, ரோப்கார் வசதி ஏற்படுத்தி, சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.ஷாஜூ, பொதுசெயலாளர், தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம், வால்பாறை: ஊட்டி, கொடைக்கானலையடுத்து வால்பாறைக்கு தான் சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். படகு இல்லம், தாவரவியல்பூங்காவில், எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. கார் பார்க்கிங் வசதி இல்லை. சுற்றுலா தகவல் மையம் இல்லை. நீர்வீழ்ச்சிகளில் குளிக்கும் சுற்றுலா பயணியருக்கு உடை மாற்றக்கூட அறை இல்லை. நல்லமுடி பூஞ்சோலையில் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையினர், நடந்து செல்லும் பாதையை கூட சீரமைக்கவில்லை. கோடை விழாவுக்கு முன் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.திருமலைசாமி, உடுமலை: மும்மூர்த்திகள் எழுந்தருளும் திருமூர்த்திமலை, பஞ்சலிங்கம் அருவி என சிறந்த ஆன்மிக சுற்றுலா மையமாக உள்ளது. அமராவதி அணை, முதலைப்பண்ணை என, மிகவும் பிரசித்தி சுற்றுலா பகுதிகளாக இருந்தது. தற்போது, அரசுத்துறைகள் அலட்சியம் காரணமாக, பொலிவிழந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை உள்ளது. உரிய நிதி ஒதுக்கி, சுற்றுலா மையங்களை மேம்படுத்த வேண்டும்.குணசேகரன், உடுமலை: திருமூர்த்திமலை, அமராவதி சுற்றுலா மையங்களுக்கு அருகிலேயே மலைவாழ் மக்கள் குடியிருப்பும் உள்ளதால், வனச்சுற்றுலா காரணமாக, சின்னாறு, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சி வயல் மலைவாழ் மக்கள் பயன்பெற்று வந்தனர். பல தரப்பினருக்கும் வாழ்வாதாரமாக உள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்த, நீர்வளத்துறை, சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ