அத்துமீறும் சுற்றுலாப் பயணியர் ஆபத்தை உணராமல் குளியல்
பொள்ளாச்சி: ஆழியாறு தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணியரை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை, மீன் பண்ணை, பூங்கா, கவியருவி என சுற்றுலா பயணியர் மனம் கவரும் இடமாக உள்ளதால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். அங்குள்ள தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சுழல் இருப்பதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை உள்ளது. அதேநேரம், வனத்துறை கண்காணிப்பில் உள்ள கவியருவில், நீர் வரத்தை பொறுத்து, குளிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், வார விடுமுறை நாட்களில், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், ஆபத்தை உணராமல் தடுப்பணையில் குளிக்கின்றனர். அவர்களைக் கண்காணித்து, எச்சரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த ஏப்., மாதம், சென்னையில் இருந்து வந்த கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர், தடுப்பணையில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆழியாறு ஆறு மற்றும் அணை மிகவும் ஆழமானவை. அணை மற்றும் ஆற்றில் குளிப்பதற்கும், நுழைவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும் சுற்றுலாப் பயணியரின் அத்துமீறல் தொடர்கிறது. அபராதம் விதித்தால் மட்டுமே இத்தகைய அத்துமீறலையும், உயிரிழப்பையும் தடுக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.