உழவர் சந்தையில் கடந்த மாதம் 2.18 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 2.18 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது. பொள்ளாச்சி உழவர் சந்தையில், மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த மாதம், ஒரு கோடியே, 99 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 7 லட்சத்து, 3 ஆயிரத்து, 911ரூபாய் மதிப்புள்ள, 15,328.71 கிலோ காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். தினமும் சராசரியாக, 59 விவசாயிகளும், 3,065 நுகர்வோர்களும் பயன்பெற்றுள்ளனர். கடந்த மாதம் மொத்தம், 475.2 மெட்ரிக் டன் காய்கறி வரத்து இருந்தது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, இரண்டு கோடியே, 18 லட்சத்து, 21 ஆயிரத்து, 265 ரூபாயாகும். மொத்தம், 1,834 விவசாயிகள், 95,038 நுகர்வோர்கள் பயன்பெற்றுள்ளனர்,' என்றனர்.