25ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
அன்னுார: போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு பேரூராட்சி மற்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளன.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அன்னுார் நகரில், தினமும் காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண ஆலோசனை கூட்டம் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.இதுகுறித்து அன்னுார் பேரூராட்சி மற்றும் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை : வரும் 25ம் தேதி முதல், புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதன்படி கோவையிலிருந்து சத்தி செல்லும் வாகனங்கள், கைகாட்டியிலிருந்து, மேட்டுப்பாளையம் சாலை, குளக்கரை சாலை, ஓதிமலை சாலை, பெரிய அம்மன் கோவில் வழியாக இந்திரா நகரில், சத்தி ரோட்டில் இணைய வேண்டும்.கோவை சாலையில் இருந்து அவிநாசி சாலை செல்வதற்கு, குளக்கரை சாலை, தர்மர் கோவில் வீதி வழியாக சத்தி ரோட்டை அடைந்து பின்னர் அவிநாசி ரோட்டை அடைய வேண்டும்.அவிநாசியில் இருந்து வரும் பஸ்கள் இனிமேல் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு நிறுத்தப்படும். இந்த மாற்றங்களுக்கு கனரக வாகன உரிமையாளர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் இதர நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் புதிய போக்குவரத்து திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்து போக்குவரத்து நெரிசல் தீர உதவ வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.