உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயந்திரங்கள் பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

இயந்திரங்கள் பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

கருமத்தம்பட்டி: வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் சார்பில், 'உழவரை தேடி' திட்டத்தின் கீழ், வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி முகாம், அனந்தா புரத்தில் நடந்தது. செம்மாண்டாம்பாளையம், கருமத்தம்பட்டி பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர் கவுரி சங்கரி தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் செந்தில் குமார் பேசுகையில், ''உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், சோள விதை ரகங்கள் கே -12, பாசிப்பயிறு வம்பன் 5-, உளுந்து வம்பன் 11 ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் பெற்று பயனடையலாம், என்றார். ஆர்.வி.எஸ்., கல்லுாரி வேளாண் பொறியியல் பிரிவு உதவி பேராசிரியர் கொம்மணபோயினா ராஜ் யாதவ் பேசுகையில், ''இன்றைய சூழலில், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நேரத்தில் கால விரயமின்றி விவசாயம் செய்வது முக்கியமானது. அதற்கு வேளாண் இயந்திரங்கள் பெரிதும் உதவியாக உள்ளன. உழவு கருவி, விதைக்கும் கருவி, களை எடுக்கும் கருவி, பயிர்களை பாதுகாக்கும் கருவிகள், அறுவடை இயந்திரங்கள் பெரிதும் பயன் அளிக்கின்றன. இவற்றை எளிதாக கையாள முடியும்,'' என்றார். அட்மா திட்ட மேலாளர் கவிதா, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். முகாமில், மண் பரிசோதனை அட்டைகளை, மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் திவ்யா, விவசாயிகளுக்கு வழங்கினார். உதவி அலுவலர் சந்தியா, அட்மா திட்ட உதவி மேலாளர் நந்தினி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை