மகிழ்ச்சி திட்டத்தில் போலீசாருக்கு பயிற்சி
கோவை: போலீசாரின் மனநலம் மற்றும் குடும்ப நலனை மேம்படுத்தும் நோக்கில், கோவை மாநகர போலீசார் சார்பில் ‘மகிழ்ச்சி’ திட்ட நிகழ்ச்சி நடந்தது. போலீசாரின் பணியின்போது பல்வேறு சவால்களையும் மன அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர். பணிச்சுமை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, மனநல ஆலோசனை, போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை, தனிநபர் மற்றும் குடும்ப ஆலோசனை, தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் மகிழ்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. உலக மனநல தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத்தினரின் மனநலத்தை மேம்படுத்தவும், போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும் நோக்கில் நேற்று இந்நிகழ்ச்சி நடந்தது. மூத்த மனநல ஆலோசகர் டாக்டர் மோனி போலீசாருக்கு பயிற்சி அளித்தார். மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, துணை கமிஷனர்கள் தங்கதுரை, கார்த்திகேயன், போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 65 போலீசார் பயிற்சி பெற்றனர்.