திறமை தேடல் தேர்வில் மாணவர்களுக்கு பயிற்சி
தொண்டாமுத்தூர்: கோவையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழக முதல்வரின் திறமை தேடல் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான, கோடைகால பயிற்சி பட்டறை முகாம் துவங்கியது.தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் கற்றல் மற்றும் உள்ளார்ந்த திறன்களை கண்டறிவதற்கும், உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலும், தமிழக முதல்வரின் திறமை தேடல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த, 2024--25ம் ஆண்டிற்கான, தமிழக முதல்வரின் திறமை தேடல் தேர்வில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து, 1,03,756 மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுதினர்.கடந்த நவம்பர் மாதம், இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் இருந்து, ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, இளங்கலை பட்டப்படிப்பு வரை, மாதந்தோறும் ஆயிரம் வீதம், 10 மாதங்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இம்மாணவர்களுக்கு, திறமை தொடர்பான ஐந்து நாட்கள் பயிற்சி பட்டறை முகாம், காருண்யா நிகர் நிலை பல்கலையில் நேற்று துவங்கியது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் துவக்கி வைத்தார்.இதில், தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட, ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு, தமிழ், ஆங்கிலம், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட திறமைகள் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.துவக்க விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.