அரசு பள்ளி எதிரில் கஞ்சா விற்ற இருவர் கைது
கோவில்பாளையம்: காளப்பட்டி அரசு பள்ளி எதிரில் கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப் பட்டனர். கோவில்பாளையம், எஸ்.ஐ., மோகன்தாஸ் தலைமையில் போலீசார், நேற்று காலை காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரிடம் சோதனை செய்தனர். இதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பிடிபட்டது. அவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கோவை, சிவானந்தா காலனி, ஐயப்பன், 25. சரவணம்பட்டி, விநாயகபுரம், ரித்திக், 22. என தெரிய வந்தது. இதில் ஐயப்பன் மீது ஏற்கனவே ஒரு வழக்கும், ரித்திக் மீது ஆறு வழக்குகளும் உள்ளன. கஞ்சா விற்பனை, பயன்பாடு, கடத்தல் குறித்து தெரிந்தால் கோவில் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.