உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணபதியில் அகற்றப்பட்ட யு டேர்ன் ; விபத்து அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம்

கணபதியில் அகற்றப்பட்ட யு டேர்ன் ; விபத்து அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம்

கோவை; சரவணம்பட்டியில் தகவல் தொழில்நுட்ப துறை, பூங்காக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சில ஆண்டுகளில் இப்பகுதி அசுர வேக வளர்ச்சியை எட்டியுள்ளது. கோவையின் மையப்பகுதியை, சரவணம்பட்டியுடன் சத்தியமங்கலம் ரோடு இணைக்கிறது. இந்த ரோட்டில், கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல் சரவணம்பட்டி வரை, போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ரோட்டை பயன்படுத்தும் பலரும் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். ரோட்டை விஸ்தரிக்க திட்டமிட்ட பணி இன்ன மும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கணபதி சூர்யா மருத்துவமனை அருகே 'யு டேர்ன்' வசதி ஏற்படுத்தப்பட்டது. அத்திபாளையம் பிரிவில் இருந்து வரும் வாகனங்கள் கணபதி பஸ் ஸ்டாண்ட் முன் திரும்பி, சங்கனுார் ரோட்டுக்குச் செல்ல வசதியாக, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் முன், 'யு டேர்ன்' ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல், சங்கனுார் ரோட்டில் இருந்து ஆவாரம்பாளையம் பகுதிக்குச் செல்லும் வாகனங்களும் இந்த 'யு டேர்னை' பயன்படுத்தின. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. அந்த 'யு டேர்ன்' தற்போது அகற்றப்பட்டு, அவ்வழி அடைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சங்கனுார் ரோடு, காந்திபுரம், அத்திப்பாளையம் பிரிவில் இருந்து வரும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று திசைகளில் இருந்தும் வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்ல முற்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து அபாயம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படுவதை தவிர்க்க, ஏற்கனவே இருந்த 'யு டேர்ன்' நடைமுறையை மீண்டும் அமல்படுத்தினால் சிக்கல் தீரும். 'விபத்தில்லா கோவை'யை உருவாக்க, போக்குவரத்து போலீசார், இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !