உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உதயா நகரா... ஆளை விடுங்க சாமி! பெயரை கேட்டாலே தெறிக்கும் டாக்சிகள்

உதயா நகரா... ஆளை விடுங்க சாமி! பெயரை கேட்டாலே தெறிக்கும் டாக்சிகள்

கோவை: கோவை மாநகராட்சி, 22வது வார்டில் விளாங்குறிச்சிக்குச் செல்லும் பிரதான ரோட்டில் உதயா நகர், ஜீவா நகர், சாவித்திரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. களி மண் பூமியாக இருப்பதால், சமீபத்தில் பெய்த மழைக்கு சேறும் சகதியுமாகி விட்டது. எந்த வாகனத்திலும் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமானது. வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: 2023ல் ரோடு தோண்டப்பட்டது. ஒரு வேலையை செய்தால் சரியாக மூடுவதில்லை. இரண்டு ஆண்டுகளாகி விட்டது. இன்னமும் ரோடு மோசமாகவே இருக்கிறது. ரோட்டை தோண்டி வேலை செய்தால், சரியாக மூட வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கால் டாக்ஸி அழைத்தால், உதயா நகரா... என கேட்டு, வர மறுக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி என்கிறார்கள். ஆனால், எவ்வித வசதியும் செய்து கொடுக்கவில்லை. குறுக்கு வீதிகள் எதுவுமே சரியில்லை. தெருவிளக்கு வசதியில்லை. திடீரென யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால், ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட, ரோடு சரியாக இல்லை. பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு, பெண்கள் அவஸ்தைப்படுகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனு கொடுத்தோம். அனைத்து விதமான வரியினங்கள் செலுத்துகிறோம். பலதடவை முறையிட்டு விட்டோம். போராட்டம் செய்யும் அளவுக்கு தள்ளி விடாதீர்கள். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'வெட்மிக்ஸ் பரப்புகிறோம்'

22வது வார்டு கவுன்சிலர் பாபுவிடம் கேட்டதற்கு, ''பாதாள சாக்கடைக்கு ரோடு தோண்டப்பட்டது. அந்த பகுதி களிமண் பூமியாக இருக்கிறது. ஐந்தடி தோண்டினாலே தண்ணீர் வந்தது. இரு நாட்களுக்கு முன் பெய்த மழையால் சேறும் சகதியுமாகி விட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ரோடு போடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக 'வெட்மிக்ஸ்' கொட்டப்படுகிறது. விரைவில் தார் ரோடு போடப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை