உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரடு, முரடாக மாறிய உடுமலை ரோடு! சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., மனு

கரடு, முரடாக மாறிய உடுமலை ரோடு! சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., மனு

பொள்ளாச்சி; கரடு, முரடாக மாறியுள்ள, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் விபத்துகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இந்நிலையில், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.,ஏ., கடிதம் அனுப்பியுள்ளார்.பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை போக்குவரத்து வசதிக்காக, கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், 24 கோடியே, 77 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.இந்த ரோடு மிக மோசமாக மாறி விபத்துகளை ஏற்படுத்தும் பகுதியாக மாறியுள்ளது. இதை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இந்நிலையில், இந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி மரப்பேட்டையில் இருந்து ஊஞ்சவேலாம்பட்டி வரை, இரண்டு வழி சாலையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.அதன்பின், கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், உருக்குலைந்து உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்; விபத்துகளும் அதிகரித்து வருகிறது. மேலும், மழை காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்குவதால், எங்கு பள்ளம் உள்ளது என தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.இது குறித்து சில மாதங்களுக்கு முன், புகார் தெரிவித்தேன். அதன்பேரில் கலெக்டர் ஆய்வு செய்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மழை பெய்யும் போது 'பேட்ச் ஒர்க்' செய்ததால், 'செட்' ஆகாமல் இரண்டொரு நாளிலே பெயர்ந்து விட்டது. எனவே, மீண்டும் ஆய்வு செய்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, பொதுமக்களின் உயிர் காக்க சாலையை தரமான முறையில் புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை