ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்
கோவை : கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் உள்ளது. இந்த மையமானது, தனியார்-பொது பங்களிப்புடன் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது.விவசாயிகளுக்கு வர்த்தக ரீதியாக உதவும் வகையில் சிறப்பாக செயல்படும் நொதிப்பான், உயிரி மூலக்கூறுகள், உயிரிஅடிப்படையிலான தயாரிப்புகள், பழங்களைப் பழுக்க வைப்பதற்கான ஹார்மோன்கள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் உள்ளிட்டவை குறித்து இம்மையம் ஆய்வுகளை மேற்கொள்கிறது.ஸ்டார்ட் அப்கள், மாணவ தொழில்முனைவோர், வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின்ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அறிவுசார் ஊக்குவிப்புகளை வழங்கி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.இந்த மையம் சார்பில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரிரங் பயோடெக் நிறுவனம், நாமக்கல் சக்தி பெர்டிலைசர்ஸ் ஆகிய இரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடனும், கே.ஐ.டி., கல்லூரி மாணவ கண்டுபிடிப்பாளர்களான அருண்குமார் மாதவன், திவ்யா பாலன் ஆகியோருடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பல்கலை துணைவேந்தர் கீதாராணி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குனர் செந்தில், பயிர் மேலாண்மைத் துறை இயக்குனர் கலாராணி, பயிர் உயிரித் தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, திட்டஇயக்குனர் மோகன்குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.