ரேபிஸ் நோய் அதிகரிப்பதால் தடுப்பூசி முகாம் துவங்கியது
கோவை; மாநகராட்சி பகுதிகளில் ரேபிஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இதுவரை, 20 ஆயிரத்து, 319 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சமீபகாலமாக, இந்நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், சிறப்பு முகாம் நடத்தி, வார்டு வாரியாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உத்தேசமாக, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 74 நாய்கள் இருப்பதாக கணக்கெடுத்து இருப்பதால், அடுத்தாண்டு பிப்., வரை ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை, மத்திய மற்றும் கிழக்கு மண்டலங்களில், 20 ஆயிரத்து 319 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மண்டலம், துடியலுார் பஸ் ஸ்டாப் அருகே தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாமை, எம்.பி.ராஜ் குமார் துவக்கி வைத்தார். நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. 'மாநகராட்சியின் இத்திட்டம், பொதுமக்கள் மற்றும் மிருகங்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் நோய் பரவல் தடுக்கும் நடவடிக்கையாகவும், ரேபிஸ் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் நோக்கிலும், இம்முகாம் நடத்தப்படுகிறது' என, கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.