வந்தேபாரத்: கோவைக்கு வந்தது பயணிகள் வரவேற்பு
கோவை:கோவை வந்த எர்ணாகுளம் - பெங்களூரு வந்தேபாரத் ரயிலுக்கு, பொதுமக்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், கோவை வழியாக செல்லும் எர்ணாகுளம் - பெங்களூரு இடையே, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அடங்கும். இந்த ரயில், புதன் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட உள்ளது. கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எர்ணாகுளம்(26651) வந்தே பாரத் ரயில், காலை 5:10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, மதியம், 1:50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். கோவைக்கு காலை 10:33 மணிக்கு வந்தடையும். எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(26652) வந்தே பாரத் ரயில், எர்ணாகுளத்தில் இருந்து மதிம் 2:20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:00 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கோவையில், இருந்து மாலை 5:20 மணிக்கு புறப்படும். கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில், நின்று செல்லும். கோவையில் இருந்து ஐந்தரை மணி நேரத்தில் பெங்களூருவுக்கு செல்ல முடியும். நேற்று மதியம், 12:10 மணிக்கு கோவை வந்த ரயிலுக்கு, உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் தலைமை வகித்தார். கோவை மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், பா.ஜ. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
'கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்'
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் கூறுகையில், ''இச்சேவையால் கோவை பயணிகள் பெரிதும் பயனடைவர். கோவையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்த பின், கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். போத்தனுார் ரயில் விஸ்தரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவை - சென்னை செல்லும் வந்தேபாரத் ரயிலில் பெட்டிகள் எண்ணிக்கை, 8 லிருந்து, 16 உயர்த்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது,'' என்றார்.