உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.சி.புத்தகத்தில் தவறான தகவல் பதிவு :கொந்தளிக்கும் வாகன உரிமையாளர்கள்

ஆர்.சி.புத்தகத்தில் தவறான தகவல் பதிவு :கொந்தளிக்கும் வாகன உரிமையாளர்கள்

கோவை: வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புதுப்பிப்புக்கு போன ஆர்.சி.புத்தகத்தில், தவறான தகவல்களை பதிவு செய்து, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், பணியாளர்களும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூலுார் தாலுகா, மேற்கு அரசூர் தட்டான் தோட்டத்தை சேர்ந்தவர் சம்பத்; விவசாயி. இவருக்கு சொந்தமான ஹீரோ ஹோண்டா பேசன் ப்ரோ பைக்கின் ஆர்.சி.புத்தகத்தை புதுப்பிக்க, கோவை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். பணிகள் நிறைவடைந்து, புதிய ஆர்.சி.புத்தகம் வீட்டுக்கு தபாலில் வந்து சேர்ந்தது. அதில் வாகனத்தின் திறன் சி.சி.,(க்யூபிக் கெபாசிட்டி) 100 சி.சி.என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, 0 என்று குறிப்பிட்டுள்ளனர். அதே போல், வாகனத்தின் பெயரில் 'செல்ப் ஸ்டார்ட்' என்பதற்கு பதிலாக, 'செல்ப் காஸ்ட்' என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படி ஏராளமான தவறுகளுடன், ஆர்.சி.புத்தகம் தயார் செய்து ஸ்மார்ட் கார்டு வடிவில் கொடுத்துள்ளனர். இந்த தவறுகளை சரிசெய்து கொடுத்தால், போக்குவரத்து போலீசார் ஆய்வின் போது சந்தேகம் எழாது. இன்சூரன்ஸ் பணப்பலன்களை பெறும்போதோ, விபத்து வழக்குகளின் போதோ, உரிமையாளருக்கு எந்த சிரமமும் ஏற்படாது. இதை அதிகாரிகள் பணியாளர்களுக்கு சுட்டிக்காட்டி, சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து வாகன உரிமையாளர் சம்பத்குமார் கூறுகையில், ''நான் மட்டுமல்ல, என்னுடன் புதுப்பிப்பு பணிக்கு சென்ற பத்து பேருக்கும், இது போன்று ஏராளமான பிழைகளோடு தான் ஆர்.சி.புத்தகம் வழங்கியுள்ளனர். இதை சரிசெய்து கொடுக்க, கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ